சிறுமியை கர்ப்பமாக்கிய உறவினருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை

சிறுமியை கர்ப்பமாக்கிய உறவினருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை
பட்டுக்கோட்டை அருகே 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய உறவினருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், பாலியல் தொல்லை கொடுத்த காதலனுக்கும் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
சிறுமிக்கு பாலியல் தொல்லை
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அணைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 26). இவர் 15 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். மேலும் மணிகண்டன் சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சிறுமியுடன் மணிகண்டன் நெருக்கமாக இருந்ததை சிறுமியின் உறவினரான நாடிமுத்து(42) என்பவர் பார்த்துள்ளார். இதையடுத்து ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் உள்ள நிலையில் அந்த சிறுமியை மிரட்டி நாடிமுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமான நிலையில் குழந்தை பிறந்துள்ளது.
2 பேர் கைது
இதையடுத்து சிறுமி பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் 2017-ம் ஆண்டு புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சிறுமிக்கு பிறந்த குழந்தைக்கு டி.என்.ஏ. பரிசோதனை செய்ததில், நாடிமுத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது உறுதியானது.
மேலும் சிறுமியை காதலித்த மணிகண்டனும் பாலியல் பலாத்காரம் செய்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
25 ஆண்டுகள் சிறை
இது தொடர்பான வழக்கு தஞ்சை போக்சோ சட்ட சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை நீதிபதி சுந்தரராஜன் விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில்,, சிறுமியின் உறவினர் நாடிமுத்துக்கு 25 ஆண்டுகள் சிறையும், 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தார்.
இதேபோல் மணிகண்டனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என கூறினார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சசிரேகா ஆஜராகி வாதாடினார்