மார்லிமந்து அணை பகுதியில் செந்நாய்கள் தாக்கி 3 மாடுகள் படுகாயம்-வனத்துறையினர் நேரில் ஆய்வு


மார்லிமந்து அணை பகுதியில் செந்நாய்கள் தாக்கி 3 மாடுகள் படுகாயம்-வனத்துறையினர் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 25 Sept 2022 12:15 AM IST (Updated: 25 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மார்லிமந்து அணை பகுதியில் செந்நாய்கள் தாக்கியதில் 3 மாடுகள் படுகாயம் அடைந்தன. இதுகுறித்து வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

நீலகிரி

ஊட்டி

மார்லிமந்து அணை பகுதியில் செந்நாய்கள் தாக்கியதில் 3 மாடுகள் படுகாயம் அடைந்தன. இதுகுறித்து வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு

நீலகிரி மாவட்டம் ஊட்டி, கூடலூர், கோத்தகிரி மற்றும் குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் யானை, சிறுத்தை, கரடி, காட்டெருமை, மான்கள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனப்பகுதியில் தீவனப் பற்றாக்குறை, அதிகரித்து வரும் கட்டிடங்களால் வனப்பகுதி பரப்பளவு குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் வருவது வாடிக்கையாகி விட்டது. இதற்கு முன்னர் வனப்பகுதிக்குள் சென்றபோது மட்டும் வனவிலங்குகளை பார்த்த நிலையில் கடந்த சில மாதங்களாக வனவிலங்குகள் ஊருக்குள் அடிக்கடி வருகின்றன. இதனால் சில நேரங்களில் வனவிலங்கு மனித- மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது.

இந்த நிலையில் ஊட்டி மார்லி மந்து அணை பகுதியில் வனவிலங்குகள் வேட்டையாடியதில் 3 மாடுகள் படுகாயம் அடைந்து உள்ளன. மேலும் அவை உயிருக்கு போராடி வருகின்றன. இதுகுறித்து மாடுகளின் உரிமையாளர்கள் கூறியதாவது:-

மனிதர்களை தாக்கும் அபாயம்

கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் வனவிலங்குகளால், கால்நடைகள் அடிக்கடி வேட்டையாடப்படுகின்றன. இவ்வாறு கால்நடைகளை தாக்கும் வனவிலங்குகள் கால்நடைகள் கிடைக்காத நேரங்களில் மனிதர்களை தாக்க முயற்சி செய்யும். எனவே இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வனத்துறையினர் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதைத்தொடர்ந்து மாவட்ட வன அதிகாரி உத்தரவின் பேரில் ஊட்டி வன சரகர் ரமேஷ் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், இந்த அணையையொட்டி அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இங்கு காட்டெருமை, சிறுத்தை, மான், கடமான், காட்டுப்பன்றி போன்றவனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. வேறு வனப்பகுதியில் இருந்து செந்நாய்கள் மார்லிமந்து அணைப்பகுதிக்கு இடம்பெயர்ந்து வந்துள்ளன.

கடந்த சில மாதங்களாக 20-க்கும் மேற்பட்ட செந்நாய்கள் கூட்டமாக சேர்ந்து, அணைக்கு தண்ணீர் குடிக்கவரும் கடமான்களை வேட்டையாடி வருகின்றன. அந்த சென் நாய்கள் தான் இந்த மாடுகளை வேட்டையாடி இருக்கலாம். இந்த பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story