மதுராந்தகம் அருகே கால்வாய்க்குள் கார் கவிழ்ந்து 3 பேர் பலி

மதுராந்தகம் அருகே ஐ.டி. நிறுவனத்தில் வேலைக்கு சேர வந்தபோது கால்வாய்க்குள் கார் கவிழ்ந்து 3 பேர் பலியானார்கள்.
மதுராந்தகம்,
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை கார் ஒன்று சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த காரில் டிரைவரோடு சேர்ந்து 3 பேர் பயணம் செய்தனர். கார் அய்யனார் கோவில் அருகே வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த தடுப்புச்சுவரில் மோதி கால்வாய்க்குள் சீறிப்பாய்ந்தது.
இதில் காரில் பயணம் செய்த 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதுபற்றி தகவல் அறிந்துவந்த மதுராந்தகம் போலீசார், 3 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஐ.டி. நிறுவனத்தில்...
பின்னர் நடத்திய விசாரணையில் காரை ஓட்டி வந்தவர் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள பச்சைமலையான் கோட்டை திம்மி நாயக்கன்பட்டியை சேர்ந்த கதிரவன் (வயது 30) என்பது தெரிய வந்தது.
அவருடன் பயணம் செய்தவர்கள் மன்னார்குடி அருகே உள்ள ஆலங்கோட்டையை சேர்ந்த நந்தகுமார் மற்றும் நெல்லை மாவட்டம் பத்தமடை சிவானந்தா தெருவை சேர்ந்த கார்த்திக் என்பதும் தெரிந்தது.
கதிரவன், கார்த்திக் இருவரும் சென்னையில் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேருவதற்காக வந்தபோது விபத்தில் சிக்கி இறந்ததும் தெரிய வந்தது. இது தொடர்பாக 3 பேரின் உறவினர்களுக்கும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.