லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது

எரியோடு அருகே லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
எரியோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் தலைமையிலான போலீசார் கோவிலூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே நின்று கொண்டிருந்த 3 பேர், போலீசாரை பார்த்ததும் ஓட்டம் பிடித்தனர். இதனைக்கண்ட போலீசார் அவர்களை விரட்டி பிடித்தனர். பின்னா் எரியோடு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் அவர்கள் கரூர் மாவட்டம் வெங்கமேடையை சேர்ந்த பார்த்திபன் (வயது 26), சீத்தப்பட்டியை சேர்ந்த கண்ணன் (65), எரியோடு அருகே உள்ள கோவிலூரை சேர்ந்த அய்யாவு (வயது 55) என்பது தெரியவந்தது. இவர்கள் 3 பேரும் சேர்ந்து அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளனர். இதனால் போலீசாரை கண்டதும் அவர்கள் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.50 ஆயிரம் மதிப்பிலான லாட்டரி சீட்டுக்கள், ரூ.20 ஆயிரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.