படப்பை அருகே கார்கள் மீது சிமெண்டு கலவை லாரி மோதல் குழந்தை உட்பட 3 பேர் சாவு


படப்பை அருகே கார்கள் மீது சிமெண்டு கலவை லாரி மோதல் குழந்தை உட்பட 3 பேர் சாவு
x

படப்பை அருகே கார்கள் மீது சிமெண்டு கலவை லாரி மோதிய விபத்தில் குழந்தை உட்பட 3 பேர் பலியானார்கள். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த வஞ்சூவாஞ்சேரி அருகே வண்டலூர் வாலாஜாபாத் சாலையில் தாம்பரம் நோக்கி கலவை லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர் திசையில் திடீரென திரும்பிய லாரி வண்டலூரில் இருந்து காஞ்சீபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த கார்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் இரண்டு கார்களும் அப்பளம் போல் நொறுங்கியது.

இதில் ஒரு காரில் இருந்த கமல்குமார் (வயது 35), தேவேஸ்குமார் (வயது 40) உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொரு காரில் சென்றவர்களில் பிரபஞ்சனி என்ற 7 மாத பச்சிளம் குழந்தை உயிரிழந்தது. 5 பேர் படுகாயமடைந்தனர்.

மீட்பு பணி

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மணிமங்கலம் மற்றும் குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு துறை போலீசார் படுகாயம் அடைந்த 5 பேரை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

காரில் நசுங்கி உயிரிழந்தவர்களின் உடலை நீண்ட போராட்டத்திற்கு பிறகு கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இதனால் வண்டலூர் வாலாஜாபாத் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story