பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 360 மனுக்கள் பெறப்பட்டன
சேலத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 360 மனுக்கள் பெறப்பட்டன.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக கொடுத்தனர். கலெக்டர் கார்மேகம் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, வங்கிக்கடன்கள், கல்வி உதவித்தொகை, திருமண நிதி உதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை என பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 360 மனுக்கள் பெறப்பட்டன.
மாற்றுத்திறனாளிகள்
தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தின் தரைதளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் 26 மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கலெக்டர் கார்மேகம் மனு பெற்றார்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பாலச்சந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, உதவி கலெக்டர் (பயிற்சி) சங்கீத் பல்வந்த் வாகி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மயில் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.