கோவில் உண்டியலை சேதப்படுத்திய வழக்கில் 4 பேர் கைது

கோவில் உண்டியலை சேதப்படுத்திய வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்
மன்னார்குடியை அடுத்த நெடுவாக்கோட்டை தெற்கு தெருவில் மாயக்காத்தான் சாம்பான் சாமி கோவில் உள்ளது. கருணாகரன் என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். இந்த கோவிலில் உண்டியல் வைப்பது தொடர்பாக இரு தரப்பினரிடையே முன் விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் கோவில் முன்பு ஒரு சிறு மண்டபத்தை அமைத்து அதில் உண்டியலை வைத்தனர். இதையடுத்து அந்த உண்டியலும், மண்டபமும் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. இதுகுறித்து கோவில் பூசாரி கருணாகரன், மன்னார்குடி நகர போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் அதே பகுதியை சேர்ந்த அறிவு என்கிற அறிவழகன் (வயது 36), பார்த்திபன்(45), வீரமணி (47), பிரபு (42) ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அவர்கள் 4 பேரும் சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றனர். ஆனால், மன்னார்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் முறைப்படி ஆஜராகி ஜாமீன் பெறவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய 4 பேரையும் கைது செய்யுமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு பாலச்சந்தர் அறிவுறுத்தலின்பேரில், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் தலைமையிலான போலீசார் அறிவழகன் (36) உள்பட 4 பேரையும் நேற்று கைது செய்தனர்.