ரூ.44½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
ரூ.44½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
செம்பட்டு:
தங்கம் கடத்தல்
திருச்சி விமான நிலையத்திற்கு உள்நாட்டு விமான சேவைகளை விட, வெளிநாட்டு விமான சேவைகள் அதிக அளவில் உள்ளன. குறிப்பாக துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த விமானத்தில் வரும் சில பயணிகள் தங்கத்தை கடத்தி வருவதும், இதேபோன்று வெளிநாடுகளுக்கு வியாபாரிகளாக சென்று திரும்பும் சில பயணிகள் அதிக அளவில் திருச்சிக்கு தங்கத்தை கடத்தி வருவதும் வாடிக்கையான ஒன்றாக இருந்து வருகிறது. இருப்பினும் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி, தங்கம் கடத்தப்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பறிமுதல்
இந்த நிலையில் நேற்று காலை சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து திருச்சிக்கு 5 விமானங்கள் வந்தன. இந்த விமானங்களில் வந்த பயணிகளிடம் மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது சுமார் 15 பயணிகள் தங்கத்தை கடத்தி வந்ததை அறிந்த, அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர்.
இதில் அவர்களிடம் இருந்து ரூ.44 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 816 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது. இதற்கிடையே சில நாட்களாக தங்கம் கடத்தவது குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.