பணியில் மெத்தனமாக இருந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட5 போலீசார் பணியிடை நீக்கம்
காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடியில் பணியில் மெத்தனமாக இருந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 5 போலீசாரை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடியில் பணியில் மெத்தனமாக இருந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 5 போலீசாரை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
24 மணி நேரமும் கண்காணிப்பு
வேலூர் மாவட்டத்தில் மணல், சாராயம் கடத்தல், கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் போன்ற குற்றச்செயல்களை தடுக்க காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக தமிழக, ஆந்திர மாநில எல்லை சோதனைச்சாவடிகளில் குற்றச்செயல்களை தடுக்க போலீசார் 24 மணி நேரமும் பணியில் அமர்த்தப்பட்டு, கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் காட்பாடியை அடுத்த கிறிஸ்டியான்பேட்டையில் உள்ள மாநில எல்லை சோதனை சாவடியில் நேற்று முன்தினம் இரவு குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி ரோந்து பணி மேற்கொண்டார்.
5 போலீசார் பணியிடை நீக்கம்
அப்போது அங்கு இரவுப்பணியில் ஈடுபட்டிருந்த காட்பாடி போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீகாந்த், மேல்பாடி போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விஜயன், முதல்நிலை காவலர் ஜெகதீசன், வேலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு தலைமை காவலர்கள் மோதிலால், நாராயணசாமி ஆகியோர் வாகன தணிக்கை மேற்கொள்ளாமல் பணியில் மெத்தன போக்குடன் செயல்பட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணனுக்கு தகவல் தெரிவித்தார். மேலும் அவர்கள் 5 பேரையும் பணியிடை நீக்கம் செய்யவும் பரிந்துரை செய்தார். அதன்பேரில் 5 பேரையும் போலீஸ் சூப்பிரண்டு பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். பணியின்போது மெத்தனமாக இருந்த 5 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் காவல்துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.