584 பள்ளி வாகனங்கள் ஆய்வு


584 பள்ளி வாகனங்கள் ஆய்வு
x

மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 584 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது.

கன்னியாகுமரி

தக்கலை:

மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 584 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது.

வாகனங்கள் ஆய்வு

மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் இயக்கப்படும் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் வருடாந்திர சிறப்பு கூட்டாய்வு நேற்று முளகுமூடு அருகே உள்ள கோழிப்போர்விளையில் நடந்தது. பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலர்மேல்மங்கை, தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு கணேசன், வட்டார போக்குவரத்து அலுவலர் சசி, ஆய்வாளர் ராஜேஷ் ஆகியோர் கூட்டாக ஒவ்வொரு வாகனங்களையும் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின் போது பள்ளி வாகனங்களில் அவசர கால கதவு அமைக்கப்பட்டுள்ளதா?, வேக கட்டுப்பாட்டு கருவி, தீயணைப்பு கருவி பொருத்தப்பட்டுள்ளதா?, வாகனங்களில் பள்ளி குழந்தைகள் ஏறும் விதமாக படிக்கட்டுகள் தாழ்வாக அமைக்கப்பட்டுள்ளதா? என ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் தக்கலை, குழித்துறை, திருவட்டார் ஆகிய 3 கல்வி மாவட்டங்களில் உள்ள 192 பள்ளிகளில் இயக்கப்படும் 584 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது.

தீயணைப்பு வீரர்கள் செயல்விளக்கம்

இந்த ஆய்வின் போது பள்ளி வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள தீயணைப்பு கருவியை அவசர காலத்தில் எவ்வாறு இயக்குவது என்பது குறித்து தக்கலை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜீவன்ஸ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர்.

முன்னதாக பள்ளி வாகன ஓட்டுனர்கள் மத்தியில் வட்டார போக்குவரத்து அலுவலர் சசி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நீங்கள் பள்ளி வாகனங்களை இயக்குவதற்கு முன்னர் வாகனத்தில் ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் உடனே பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்து சரிசெய்த பின்னர் தான் வாகனத்தை இயக்க வேண்டும். செல்போனில் பேசி கொண்டு வாகனத்தை ஓட்டக்கூடாது. உங்கள் கவனம் முழுவதும் வாகனத்தில்தான் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story