தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு 5-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு 5-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு 5-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினர் நேற்று அஞ்சலி செலுத்தினர்.
கனிமொழி எம்.பி. மரியாதை
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் 5-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் உருப்படங்களுக்கு தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஜி.வி.மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., துணை மேயர் ஜெனிட்டா, மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், மண்டல தலைவர்கள் அன்னலட்சுமி, நிர்மல்ராஜ், பாலகுருசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் கனிமொழி எம்.பி. கூறும்போது, தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்காக போராடியவர்களின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் 5-ம் ஆண்டு நினைவுநாளில், அவர்களின் நினைவுகளை மனதில் நிறுத்தி அஞ்சலி செலுத்தி உள்ளோம். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களோடு நிற்கிறார். தமிழக அரசு தொடர்ந்து மக்களுக்காக போராடிக் கொண்டு இருக்கிறது. வழக்காடு மன்றத்தில் மக்களோடு துணை நிற்கிறது என்றார்.
உறுதிமொழி ஏற்பு
ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மகேஷ், கெபிஸ்டன், அமிர், அர்ஜூன் மற்றும் கூட்டமைப்பினர் உயிரிழந்தவர்களின் கல்லறைகளுக்கு நேரில் சென்று மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்றனர். மேலும், தெற்கு வீரபாண்டியபுரம், மடத்தூர், சில்வர்புரம், பாத்திமாநகர், தோமையார் கோவில் தெரு, பூபாலராயர்புரம், முத்தையாபுரம், லயன்ஸ்டவுன் ஆகிய பகுதிகளிலும் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
அப்போது, தமிழக முதல்-அமைச்சர் உறுதி அளித்தப்படி சிறப்பு சட்டம் இயற்றி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்ற வேண்டும், துப்பாக்கி சூடு நடத்திய போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும், சி.பி.ஐ. விசாரணையை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளக்கூடாது. இறந்தவர்களின் நினைவாக நினைவகம் அமைக்க வேண்டும், மே 22-ந் தேதியை சூழலியல் பாதுகாப்பு தியாகிகள் தினமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
மெழுகுவர்த்தி ஏந்தி..
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் ஒருங்கிணைப்பாளர்கள் அரிராகவன், வசந்தி ஆகியோர் தலைமையில் தனியார் மண்டபத்தில் வைத்து நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகள், அமைப்புகளை சேர்ந்தவர்கள், இறந்தவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் புகைப்படங்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் நகர வர்த்தக வியாபாரிகள் சங்க தலைவர் விநாயகமூர்த்தி, மருதம்பெருமாள், தாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம் தலைமையில், துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மாநகர செயலாளர் ராஜா, மாவட்டக் குழு உறுப்பினர் முத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ம.தி.மு.க. சார்பில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணிச் செயலாளர் விநாயகா ஜி.ரமேஷ் தலைமையில் மாநகர செயலாளர் முருகபூபதி, மாநில மீனவர் அணி செயலாளர் நக்கீரன், மாநில தொண்டரணி துணை செயலாளர் பேச்சிராஜ், முன்னாள் ஒன்றியச் செயலாளர் சுந்தரராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர்.
பலத்த பாதுகாப்பு
ஸ்டெர்லைட் ஆதரவு அமைப்புகளை சேர்ந்தவர்களும் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். தூத்துக்குடி லூர்தம்மாள்புரம், கரிகளம் காலனி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் ஸ்டெர்லைட் ஆதரவு அமைப்புகளை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டு துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் மரியாதை செலுத்தினர். மேலும், பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இதுதவிர பல்வேறு கட்சிகள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நகரின் முக்கியமான பகுதிகளில் மொத்தம் 2 ஆயிரத்து 200 போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.