6 ஊராட்சி செயலாளர்கள் அதிரடி மாற்றம்


6 ஊராட்சி செயலாளர்கள் அதிரடி மாற்றம்
x

என்.எல்.சி. இந்தியா நிறுவனத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய 6 ஊராட்சி செயலாளர்களை இடமாற்றம் செய்து மேல்புவனகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

கடலூர்

கடலூர்:

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தனது சுரங்க விரிவாக்க பணிகளுக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தி வருகிறது. இதற்கு எதிராக அப்பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இருப்பினும் என்.எல்.சி. நிறுவனம் தொடர்ந்து நிலங்களை கையகப்படுத்தும் வேலையில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் மே தினத்தையொட்டி கடலூர் மாவட்டத்தில் உள்ள 683 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் மேல்புவனகிரி ஒன்றியத்தை சேர்ந்த கத்தாழை, சின்னநெற்குணம், மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, நெல்லிக்கொல்லை, எறும்பூர் ஆகிய 6 ஊராட்சிகளிலும் என்.எல்.சி.க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

6 ஊராட்சி செயலாளர்கள் இடமாற்றம்

இது பற்றி மாவட்ட கலெக்டர், மாவட்ட திட்ட இயக்குனர் ஆகியோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் என்.எல்.சி.க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய 6 ஊராட்சிகளில் பணியாற்றி வந்த ஊராட்சி செயலாளர்களை நிர்வாக காரணங்களுக்காக மேல்புவனகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் அதிரடியாக இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இது பற்றிய விவரம் வருமாறு:-

கத்தாழை ஊராட்சி செயலாளர் சிற்றரசு துறிஞ்சிக்கொல்லைக்கும், சின்ன நெற்குணம் ஊராட்சி செயலாளர் சசிகுமார் மேல்வளையமாதேவிக்கும், மேல்வளையமாதேவி ஊராட்சி செயலாளர் லீமா சின்னநெற்குணத்திற்கும், கீழ்வளையமாதேவி ஊராட்சி செயலாளர் லூர்துமேரி நெல்லிக்கொல்லைக்கும், அங்கிருந்த ஊராட்சி செயலாளர் பாலமுருகன் கத்தாழைக்கும், எறும்பூர் பாலகணபதி காத்திருப்போர் பட்டியலுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


Next Story