நகைக்கடை உரிமையாளர்களிடம் 6 பவுன்- ரூ.2½ லட்சம் பறிப்பு

திருமயம் அருகே நகைக்கடை உரிமையாளர்களிடம் 6 பவுன் மற்றும் ரூ.2½ லட்சத்தை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருமயம்:
6 பவுன் நகை பறிப்பு
திருமயம் அருகே ஈழக்குடிபட்டியை சேர்ந்தவர் அடைக்கப்பன் (வயது 50). இவரது மகன் அருண்குமார் (24). இவர்கள் சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டி கடைவீதியில் நகைக்கடை வைத்துள்ளனர். நேற்று இரவு தந்தை-மகன் இருவரும் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தனர். இவர்கள் இருவரும் பைபாஸ் ரோடு சுடுகாடு அருகே வந்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி கத்தியை காட்டி மிரட்டி அவர்கள் வைத்திருந்த 6 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர்.
வலைவீச்சு
இதுகுறித்து அருண்குமார் திருமயம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன், துணை போலீஸ் சூப்பிரண்டு அப்துல் ரகுமான், இன்ஸ்பெக்டர் கவுரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.