வாலிபருக்கு 60 ஆண்டு சிறை

திருப்பூர்
உடுமலை கொங்கல்நகரம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 28). கூலித்தொழிலாளி. கடந்த 4-10-2020 அன்று குடிபோதையில் இருந்த சந்தோஷ், 14 வயது பள்ளி மாணவி ஒருவர் இயற்கை உபாதை கழிக்க சென்றபோது அவரை கீழே தள்ளி பாலியல் வன்கொடுமை செய்தார்.
இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் உடுமலை மகளிர் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சந்தோசை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்த வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.
பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்கு போக்சோ சட்டத்தின் 3 பிரிவுக்கு தலா 20 ஆண்டு சிறை தண்டனை, தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்குமாறு நீதிபதி நாகராஜன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில், அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து சாட்சிகளை உரிய நேரத்தில் ஆஜர்படுத்தி, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக்கொடுத்த உடுமலை மகளிர் போலீசாரை திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் பாராட்டினார்.