7-வது ஆசிய ஆக்கிப்போட்டிக்கான சாம்பியன்ஷிப் கோப்பை அறிமுக விழா


7-வது ஆசிய ஆக்கிப்போட்டிக்கான சாம்பியன்ஷிப் கோப்பை அறிமுக விழா
x
தினத்தந்தி 30 July 2023 12:15 AM IST (Updated: 30 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் 7-வது ஆசிய ஆக்கிப்போட்டிக்கான சாம்பியன்ஷிப் கோப்பை அறிமுக விழாவில் அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் பங்கேற்றனர்.

விழுப்புரம்

விழுப்புரம்:

7-வது ஆசிய ஆடவர் ஆக்கி சாம்பியன்ஷிப்-2023 போட்டி, 16 ஆண்டுகளுக்குப்பிறகு வருகிற 3.8.2023 முதல் தொடங்கி 12.8.2023 வரை சென்னையில் நடைபெற உள்ளது. இப்போட்டியை சிறப்பாக நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு ரூ.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதையொட்டி இப்போட்டிக்கான சாம்பியன்ஷிப் கோப்பையானது உலகின் பல நாடுகளுக்கும், இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் எடுத்துச்செல்லப்பட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லும் வகையிலான நிகழ்ச்சியை சென்னையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் கடந்த 20-ந் தேதியன்று தொடங்கி வைக்கப்பட்டது.

விழுப்புரத்தில் அறிமுக விழா

அதனை தொடர்ந்து இக்கோப்பையானது தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று நேற்று விழுப்புரம் மாவட்டத்திற்கு வரப்பெற்றது. இதன் அறிமுக விழா விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. விழாவில், இந்த கோப்பையை பொதுமக்கள் மற்றும் மாணவ- மாணவிகள் பார்வையிடுவதற்காக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் அறிமுகம் செய்து வைத்ததோடு கோப்பை தொடர்பான 'பொம்மன்" இலச்சினையும் அறிமுகம் செய்து வைத்தனர்.

அதனை தொடர்ந்து இந்த கோப்பையை, மற்ற மாவட்டங்களுக்கு கொண்டு செல்லும் வகையில் 'பாஸ் தி பால்" என்ற நிகழ்ச்சியை அமைச்சர்கள் க.பொன்முடி, செஞ்சி கே.எஸ்.மஸ்தான், மாவட்ட கலெக்டர் சி.பழனி ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் மாணவ- மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்கள்.

இவ்விழாவில் எம்.எல்.ஏ.க்கள் நா.புகழேந்தி, டாக்டர் இரா.லட்சுமணன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், கூடுதல் கலெக்டர் சித்ரா விஜயன், மாவட்ட வன அலுவலர் சுமேஷ் சோமன், திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவிதேஜா, நகரமன்ற துணைத்தலைவர் சித்திக்அலி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், மாவட்ட விளையாட்டு அலுவலர் வேல்முருகன், மாவட்ட ஆக்கி சங்க செயலாளர் அருள் எட்வின், ஆக்கி கோப்பை பொறுப்பாளர் சேவியர் ஜோதி சற்குணம் மற்றும் மாணவ- மாணவிகள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.


Next Story