மாமல்லபுரத்தில் இருந்து வந்த 5½ டன் நந்தீஸ்வரர் சிலை

தேனி வீரப்ப அய்யனார் கோவிலுக்கு மாமல்லபுரத்தில் இருந்து 5½ டன் எடை கொண்ட நந்தீஸ்வரர் சிலை கொண்டு வரப்பட்டது.
தேனி அல்லிநகரம் மலையடிவாரத்தில் வீரப்ப அய்யனார் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில் பராமரிப்பு பணிகளை அல்லிநகரம் கிராம கமிட்டியினர் செய்து வருகின்றனர். இந்த கோவிலில் நந்தீஸ்வரர் சிலை அமைக்க கிராம கமிட்டியினர் மற்றும் அல்லிநகரம் சிவனடியார் குழுவினர் முடிவு செய்தனர். அதன்படி, மாமல்லபுரத்தில் 5½ டன் எடையுள்ள நந்தீஸ்வரர் சிலை தயாரிக்கப்பட்டது. இந்த சிலை நேற்று தேனி அல்லிநகரத்துக்கு கொண்டு வரப்பட்டது. இந்த சிலை 5¼ அடி உயரம், 2¾ அடி அகலம், 6¾ அடி நீளம் கொண்டது. இந்த சிலை அல்லிநகரத்தில் உள்ள ஒரு தனியார் மில் வளாகத்தில் கிரேன் மூலம் இறக்கி வைக்கப்பட்டது.
அங்கு அந்த சிலைக்கு, கிராம கமிட்டி தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தப்பட்டது. இதில், துணைத்தலைவர் சிவராம், இணைச்செயலாளர் வீரமணி, பொருளாளர் முருகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். ஏராளமான பக்தர்கள் அங்கு வந்து தரிசனம் செய்தனர். இதுகுறித்து கிராம கமிட்டி நிர்வாகிகளிடம் கேட்டபோது, "இந்த சிலை 48 நாட்களுக்கு நவதானியம், நீரில் ஊற வைத்து வழிபாடு செய்யப்படும். இதற்காக இந்த மில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தொட்டியில் வைக்கப்படும். 48 நாட்களுக்கு பிறகு நந்தீஸ்வரர் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கோவிலில் பிரதிஷ்டை செய்யப்படும்" என்றனர்.