தெருக்கூத்து பார்த்து விட்டு திரும்பிய 78 வயது மூதாட்டி பலாத்காரம்


தெருக்கூத்து பார்த்து விட்டு திரும்பிய 78 வயது மூதாட்டி பலாத்காரம்
x
சேலம்

எடப்பாடி:-

எடப்பாடி அருகே தெருக்கூத்து பார்த்து விட்டு திரும்பிய போது 78 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மூதாட்டி

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே இருப்பாளி ஊராட்சி பகுதியை சேர்ந்த 78 வயது மூதாட்டிக்கு 3 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் ஏற்கனவே இறந்து விட்ட நிலையில், மற்ற 2 மகன்களும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கணவர் இறந்து விட்டதால் மூதாட்டி அவருக்கு சொந்தமான வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இருப்பாளி பகுதியில் உள்ள காந்த மாரியம்மன் கோவிலில் தற்போது மண்டல பூஜை நடந்து வருகிறது.

இதையொட்டி நேற்று முன்தினம் இரவு கோவில் திடலில் தெருக்கூத்து நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை பார்த்து விட்டு மூதாட்டி தனியாக வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

பலாத்காரம்

அப்போது பூசாரி மூப்பன் வளவு பகுதியில் சென்றபோது அவரை வழிமறித்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மூதாட்டியின் வாயை பொத்தி வலுக்கட்டாயமாக அருகில் உள்ள புதருக்கு இழுத்து சென்று பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் மது போதையில் இருந்த அந்த நபர் மூதாட்டியை தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். இதில் படுகாயம் அடைந்த மூதாட்டி மயக்கம் அடைந்தார்.

சிறிது நேரத்துக்கு பின்னர் மயக்கம் தெளிந்து எழுந்து வீட்டுக்கு சென்ற மூதாட்டி தனக்கு ஏற்பட்ட கொடுமையை உறவினர்களிடம் கூறி அழுதார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மூதாட்டியை எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

இந்த விபரீத சம்பவம் குறித்து உறவினர்கள் அளித்த புகாரின்பேரில் பூலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த காமக்கொடூரனை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story