குழந்தைகள் காப்பகத்தில் தங்கியிருந்த 7-ம் வகுப்பு மாணவி திடீர் சாவு

சேலம் கன்னங்குறிச்சி பகுதியில் உள்ள ஒரு தனியார் குழந்தைகள் காப்பகத்தில் விக்டோரியா (வயது 13) என்ற சிறுமி தங்கியிருந்தாள். இவள் குழந்தை பருவத்தில் இருந்து, அந்த காப்பகத்தில் வளர்ந்து வந்தாள். மேலும் விக்டோரியா அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்தநிலையில் அந்த மாணவி கடந்த மாதம் 23-ந் தேதி காய்ச்சலால் கடும் அவதிப்பட்டாள்.
பின்னர் அவள் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாள். அங்கு அவளுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதனிடையே விக்டோரியாவுக்கு கண் பார்வை மங்கியதால் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றாள். பின்னர் மீண்டும் அந்த மாணவி சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டாள். நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி விக்டோரியா திடீரென பரிதாபமாக இறந்தாள். இந்த சம்பவம் குறித்து கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.