பழனியில் மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வங்கி மேலாளர் பலி

பழனியில் மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் வங்கி மேலாளர் பலியானார்.
பெரம்பலூர் மாவட்டம் சத்திரமனை பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 40). இவர், பழனி அருகே சாமிநாதபுரத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்தார். இதற்காக செந்தில்குமார் பழனி இந்திராநகரில் வாடகைக்கு வீடு எடுத்து, மனைவி ராஜேஸ்வரியுடன் வசித்து வந்தார். அவர் பழனியில் இருந்து தினமும் சாமிநாதபுரத்தில் உள்ள வங்கிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று வருவது வழக்கம். அதன்படி நேற்று செந்தில்குமார் பணிக்கு சென்றார். பின்னர் பணி முடிந்து இரவு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். பழனியில், பழைய தாராபுரம் சாலையில் மோட்டார் சைக்கிள் வந்தது.
அப்போது எதிரே சின்னக்கலையம்புத்தூரை சேர்ந்த பிரவீன் (18) மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்குநேர் மோதியது. இந்த விபத்தில் 2 பேரும் மோட்டார் சைக்கிள்களில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இதில் செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். பிரவீன் படுகாயம் அடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பழனி டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது செந்தில்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த பிரவீனையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.