ஆற்றங்கரையில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்


ஆற்றங்கரையில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 6 Dec 2022 12:15 AM IST (Updated: 6 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

விளைநிலங்களுக்குள் வெள்ளம் புகும் அபாயம் உள்ளதால், ஆற்றங்கரையில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

நீலகிரி

பந்தலூர்,

விளைநிலங்களுக்குள் வெள்ளம் புகும் அபாயம் உள்ளதால், ஆற்றங்கரையில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மண் சரிவு

பந்தலூர் அருகே பொன்னானி, சக்கரைகுளம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். பொன்னானியில் ஆறு செல்கிறது. இந்த ஆற்றில் மழை காலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அப்போது அருகே பொதுமக்களின் வீடுகளுக்குள் வெள்ளம் புகுவது தொடர் கதையாக உள்ளது. இதனால் சில வீடுகள் இடிந்து விழுந்தன.

மேலும் விளைநிலங்களுக்குள் வெள்ளம் புகுந்ததால், பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் அபாயம் ஏற்பட்டது. இதனால் பொன்னானி ஆற்றை தூர்வாரி, அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறை மூலம் ெபாக்லைன் எந்திரம் மூலம் ஆறு தூர்வாரப்பட்டது. இந்தநிலையில் பொன்னானியில் இருந்து அம்மங்காவு செல்லும் சாலையில் பாலம் அருகே சக்கரைகுளம் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு உள்ளது.

தடுப்புச்சுவர்

அதே பகுதியில் ஆதிவாசி காலனி இருக்கிறது. அப்பகுதியில் ஆற்றின் கரையோரத்தில் மண்அரிப்பு ஏற்பட்டு உள்ளதால், பலத்த மழை பெய்யும் சமயங்களில் காலனி உள்பட கிராமத்துக்குள் வெள்ளம் புகும் அபாயம் உள்ளது. மேலும் விளைநிலங்களுக்குள்ளும் தண்ணீர் புகுந்து தேங்கும் நிலை காணப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, மழை காலங்களில் வெள்ளம் ஏற்படும் போது, கிராமத்துக்குள் வெள்ளம் புகுவதை தடுக்க பொன்னானி ஆறு தூர்வாரப்பட்டு அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தற்போது ஆற்றின் நடுவே மண்அரிப்பு ஏற்பட்டு உள்ளதால், இனிவரும் நாட்களில் மழை பெய்தால் மீண்டும் கிராமம் மற்றும் விளைநிலங்களுக்குள் வெள்ளம் புகும் நிலை உள்ளது. எனவே, ஆற்றங்கரையில் தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story