தற்கொலைக்கு தூண்டிய வியாபாரி மீது வழக்கு

பெண் தீக்குளித்து இறந்தது தொடர்பாக தற்கொலைக்கு தூண்டிய வியாபாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
களக்காடு:
களக்காடு அருகே சிதம்பரபுரம் முத்துநகரைச் சேர்ந்தவர் குமார் மனைவி தமிழ்செல்வி (வயது 45). இவர் களக்காடு யூனியன் அலுவலகத்தில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குமார் இறந்து விட்டார். கடந்த 6-ந் தேதி தமிழ்செல்வி தனது வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கணவர் இறந்த துக்கத்தில் தமிழ்செல்வி தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். இந்த நிலையில் தமிழ்செல்வியின் மகன், களக்காடு போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதில், தனது தாயாரை களக்காடு நகர தெருவை சேர்ந்த ஷேக் முகம்மது மகன் சூப் வியாபாரியான செய்யது என்பவர் தற்கொலைக்கு தூண்டியதாக தெரிவித்து இருந்தார்.
இதுதொடர்பாக செய்யது மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செய்யது மீது ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பத்மநேரியை சேர்ந்த கோவில் பூசாரியை கொலை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.