ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தரச்சான்று வழங்கும் மத்திய குழுவினர் ஆய்வு

திசையன்விளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தரச்சான்று வழங்கும் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.
திசையன்விளை:
தேசிய தர சான்றிதழ் வழங்கும் மத்திய அரசு சுகாதார குழுவில் இடம்பெற்றுள்ள கேரள மாநிலத்தை சேர்ந்த டாக்டர் சிவதாஸ், மராட்டிய மாநிலத்தை சேர்ந்த டாக்டர் சுகந்தா கெய்ட்வாட் மற்றும் குழுவினர் நேற்று திசையன்விளை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்தனர். அங்கு செயல்பட்டு வரும் 12 பிரிவுகளிலும் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு காணப்பட்ட சுகாதார குறைபாடுகளை செல்போனில் படம் பிடித்தனர். மேலும் குறைகளை சரிசெய்ய உத்தரவிட்டனர்.
முன்னதாக ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் அறிமுக கூட்டம் நடந்தது. நெல்லை மாவட்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் ராஜேந்திரன் வரவேற்றார். திசையன்விளை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தினேஷ்வர்மா, ஆஸ்பத்திரியில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து பேசினார். டாக்டர்கள், செவிலியர்கள் அறிமுகம் செய்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமசாமி செய்திருந்தார். ஆய்வு பணி வருகிற 23-ந் தேதி வரை நடக்கிறது.