விஷப்பூச்சிகளின் கூடாரமான பாழடைந்த கட்டிடம்

விஷப்பூச்சிகளின் கூடாரமான பாழடைந்த கட்டிடம்
பந்தலூர்
பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட உப்பட்டி அருகே புஞ்சைவயல் உள்ளது. இங்கு அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் புஞ்சைவயல் மட்டுமின்றி உப்பட்டி, நெல்லியாளம் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பள்ளிக்கு சொந்தமான கட்டிடம் ஒன்று, பாழடைந்த நிலையில் நீண்ட நாட்களாக இடித்து அகற்றப்படாமல் உள்ளது. இந்த கட்டிடத்தை சுற்றி புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் விஷப்பூச்சிகளின் கூடாரமாக அந்த கட்டிடம் மாறிவிட்டது. இதன் காரணமாக பள்ளிக்கு வந்து செல்லும் மாணவ-மாணவிகள் அச்சப்படுகிறார்கள். இதுகுறித்து பெற்றோர் கூறும்போது, புஞ்சைவயல் அரசு பள்ளியில் எதற்கும் உதவாத வகையில் பாழடைந்த நிலையில் கட்டிடம் ஒன்று உள்ளது. அதை சீரமைக்க வேண்டும். இல்லையென்றால் இடித்து அகற்ற வேண்டும். அங்கு விஷப்பூச்சிகள் நடமாட்டம் உள்ளதால், அந்த வழியாக செல்லும் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.