பூட்டிய வீட்டில் பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து

நாகர்கோவிலில் பூட்டிய வீட்டில் பிரிட்ஜ் வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமானது.
நாகா்கோவில்:
நாகர்கோவிலில் பூட்டிய வீட்டில் பிரிட்ஜ் வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமானது.
பிரிட்ஜ் வெடித்தது
நாகர்கோவில் வடசேரி கிருஷ்ணன்கோவில் யாதவ தெருவை சேர்ந்தவர் லட்சுமி. நேற்றுமுன்தினம் இரவு இவர் வீட்டை பூட்டி விட்டு ஊரல்வாய்மொழி பகுதியில் நடந்த ஒரு கோவில் கொடைவிழாவிற்கு குடும்பத்துடன் சென்றார். இந்தநிலையில் நேற்று காலை அவரது வீட்டில் இருந்து புகை வந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் திடுக்கிட்டு இதுபற்றி லட்சுமிக்கும், நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.
உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு வீட்டில் உள்ள ஒரு அறையில் இருந்த பிரிட்ஜ் வெடித்து தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. உடனே வீரர்கள் வீட்டில் உள்ள மின் இணைப்பை துண்டித்தனர்.
பெரும் தீ விபத்து தவிர்ப்பு
பின்னர் தண்ணீரை பீய்ச்சியடித்து சுமார் ½ மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை முற்றிலுமாக அணைத்தனர். இந்த தீ விபத்தில் பிரிட்ஜ் மற்றும் சில எலக்ட்ரானிக் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து நாசமாகின.
வீட்டில் கியாஸ் சிலிண்டரும் இருந்தது. அதிர்ஷ்டவசமாக இதில் தீப்பிடிக்கவில்லை. சரியான நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. பிரிட்ஜில் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். மேலும் இதுபற்றி வடசேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.