புதுமாப்பிள்ளையிடம் தங்கசங்கிலி பறிப்பு

சாணார்பட்டி அருகே, திருமணத்துக்கு முந்தைய நாளில் புதுமாப்பிள்ளையிடம் தங்கசங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாணார்பட்டி அருகே உள்ள அஞ்சுகுளிப்பட்டியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 23). மில் தொழிலாளி. இவருக்கு நேற்று திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு இவர், திருமண விழாவுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு தனது உறவினரான 15 வயது சிறுவனுடன் கோபால்பட்டிக்கு மொபட்டில் சென்றார்.
பின்னா் இரவில் அவர்கள் 2 பேரும் அஞ்சுகுளிப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தனர். கன்னியாபுரம்-அஞ்சுகுளிப்பட்டி சாலையில் எல்லப்பட்டி அருகே மொபட் வந்தது. அப்போது அவர்களை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 ேபர், மொபட்டை மறித்து நின்றனர். ஜெயபிரகாசிடம், அவர்கள் ஏதோ முகவரி கேட்டனர். இதனை நம்பிய அவர், அவர்களிடம் பேசி கொண்டிருந்தார். சிறிதுநேரத்தில் அவர்கள், ஜெயபிரகாசை மிரட்டி அவர் அணிந்திருந்த 1½ பவுன் தங்கசங்கிலி மற்றும் செல்போனை பறித்து கொண்டு தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளிலேயே மின்னல் வேகத்தில் சென்று விட்டனர்.
இதுகுறித்து சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் ஜெயபிரகாஷ் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருமணத்துக்கு முந்தைய நாளில் புதுமாப்பிள்ளையிடம் தங்க சங்கிலி, செல்போன் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.