களக்காட்டை தலைமை இடமாக கொண்டு புதிய தாலுகா தொடங்க வேண்டும்; கலெக்டரிடம் பொதுமக்கள் மனு


களக்காட்டை தலைமை இடமாக கொண்டு புதிய தாலுகா தொடங்க வேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் மனு வழங்கினர்.

திருநெல்வேலி

களக்காட்டை தலைமை இடமாக கொண்டு புதிய தாலுகா தொடங்க வேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் மனு வழங்கினர்.

குறைதீர்க்கும் கூட்டம்

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்.

நாம் தமிழர் கட்சி வணிகர் பாசறை சார்பில் இடையன்குளத்தை சேர்ந்த செல்வின் தலைமையில் பொதுமக்கள் மனு வழங்கினர். அதில், ''தமிழகத்தில் நாங்குநேரி தாலுகா அதிக பரப்பளவைக் கொண்டதாக உள்ளது. நீண்ட தூரத்தில் இருந்து கிராம மக்கள் நாங்குநேரி தாலுகா அலுவலகத்துக்கு வந்து செல்ல காலதாமதம் ஏற்படுகிறது. எனவே களக்காடு ஒன்றியம், களக்காடு நகராட்சி, திருக்குறுங்குடி பேரூராட்சி ஆகியவற்றை உள்ளடக்கி களக்காட்டை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா அமைக்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு

நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சத்யா, நெல்லை தொகுதி செயலாளர் சந்திரசேகர் உள்ளிட்டோர் வழங்கிய மனுவில், ''மானூர் ரஸ்தா பகுதியில் புதிய டாஸ்மாக் கடை திறக்க ஏற்பாடு செய்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். எனவே அங்கு டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது'' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

நெல்லை மேலப்பாளையம் குறிச்சி பகுதியைச் சேர்ந்த பெண்கள், 31-வது வார்டு கவுன்சிலர் அமுதா தலைமையில் காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் வழங்கிய மனுவில், ''நெல்லை மாநகராட்சி 31-வது வார்டுக்கு உட்பட்ட குறிச்சி, சாந்தமூர்த்தி தெரு பகுதிக்கு குடிநீர் வழங்கி 7 நாட்கள் ஆகிறது. குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனை தடுத்து சுத்தமான குடிநீரை தினமும் சீராக வழங்க வேண்டும்'' என்று தெரிவித்து இருந்தனர்.

தரமான சாலை

மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் ராமையன்பட்டி பஞ்சாயத்து துணை தலைவர் செல்வகுமார் மற்றும் பொதுமக்கள் வழங்கிய மனுவில், ''ராமையன்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட புது காலனி, சிவாஜி நகர், பாலாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மெட்டல் சாலைகள் களிமண்ணால் அமைக்கப்பட்டு வருகிறது. இதை தரமானதாக அமைக்க வேண்டும். அப்பகுதியில் தெருக்குழாய்களுக்கு அனுமதி அளித்த போதிலும், இதுவரையிலும் அமைக்கப்படவில்லை. மணிநகர் பகுதியில் சாலை, தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்'' என்று கூறி இருந்தனர்.

இதேபோன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனுக்கள் வழங்கினர்.


Next Story