பாதாளத்தை நோக்கி பயணிக்கும் பனைமரத்தொழில்


பாதாளத்தை நோக்கி பயணிக்கும் பனைமரத்தொழில்
x
தினத்தந்தி 17 Oct 2022 6:45 PM GMT (Updated: 17 Oct 2022 6:46 PM GMT)

பாதாளத்தை நோக்கி பயணிக்கும் பனைமரத்தொழிலை அரசு மீட்டெடுக்க வேண்டும் என்று பனை தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல்

உற்பத்தி கூடாரம்


அடி முதல் நுனி வரை அத்தனையும் பயன்படுகிற ஒரு மரம் இருக்கிறது என்றால் அது பனைமரம் தான். இது, தமிழக அரசின் மாநில மரம் என்பது கூடுதல் சிறப்பு. 'கற்பகத்தரு' என்று பனைமரம் அழைக்கப்படுகிறது.


பனைமரத்தில் ஆண், பெண் மரம் என 2 வகை உண்டு. ஆண் பனையை அலவு பனை என்றும், பெண் பனையை பருவபனை என்றும் அழைக்கின்றனர். பிற மரங்களோடு ஒப்பிடும்போது, பல்வேறு சிறப்புகளுக்கு சொந்தமானதாக பனைமரம் திகழ்கிறது. வறட்சியை தாங்கி வளரும் தன்மை கொண்டது பனைமரங்கள்.


ஒவ்வொரு நாளும் பனைமரத்தின் பலன்களை ருசிக்கவும், அனுபவிக்கவும் செய்யலாம். சுவைமிகு நுங்கு, ருசியான கிழங்கு, நறுமணம் வீசும் பனம்பழம், மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும் தவுண்-குருத்து, இனிக்கும் பதநீர்-கருப்பட்டி, கற்கண்டு என பல்வேறு பொருட்களின் உற்பத்தி கூடாரமாக பனைமரம் விளங்குகிறது.


இதேபோல் ஓலையால் உருவான கலைநயமிக்க பொருட்கள், விசிறி, மட்டை, நார், பனங்கட்டை, சில்லாட்டை (வடிகட்டிபோன்ற பொருள்), விதை ஆகியவை பனைமரத்தில் இருந்து கிடைக்கின்றன. பனைமரங்கள் மனித சமுதாயத்துக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் என்ேற சொல்லலாம்.


பனை தொழிலாளர்கள்



தமிழகத்தில் பனைமரங்களை நம்பி ஏராளமான தொழிலாளர்கள் உள்ளனர். குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இந்த பனைமரத்தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகம். பிற மாவட்டங்களில் பரவலாக வசிக்கின்றனர். பனைசார்ந்த பல்வேறு தொழில்களில் இவர்கள் ஈடுபடுகின்றனர். ஆனால் பெரும்பாலான தொழிலாளர்கள் பனைமரத்தில் இருந்து பதநீர் இறக்கி, கருப்பட்டி தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.


திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை எரியோடு அருகே உள்ள கோவிலூர், நல்லூர், கரட்டுச்சாலையூர், பழையதோப்பூர், சுக்காம்பட்டி, நடுத்தோப்பூர், களத்தூர், ஆர்.கோம்பை, வடமதுரை மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமங்களில் பனைமரத்தொழிலாளர்கள் உள்ளனர். இதில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பதனீர் இறக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


அழிவின் விளிம்பில்...


இனிக்கும் பதநீரை இறக்கினாலும், பனை தொழிலாளர்களின் வாழ்க்கை என்னவோ கசந்து கொண்டு தான் இருக்கிறது. ஏழ்மை தான் இவர்களின் தோழமை. பன்னெடுங்காலமாக பனைசார்ந்த தொழிலுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனால் அந்த தொழிலை நம்பி உள்ள தொழிலாளர்கள் வேறு தொழிலை நோக்கி புலம் பெயர்ந்து கொண்டிருக்கின்றனர். இதனால் காலப்போக்கில் பனைமரத்தொழிலாளர்கள் காணாமல் போகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் நாளுக்கு நாள் பாதாளத்தை நோக்கிய பயணத்தில் பனைமரத்தொழில் சென்று கொண்டிருக்கிறது. எனவே அழிவின் விளிம்பில் உள்ள பனைமரத்தொழிலை மீட்டெடுக்க அரசு முயற்சி செய்ய வேண்டும் என்பதே பனைமரத்தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதுகுறித்து பனை தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


கருவிகள் வழங்க வேண்டும்


பனையேறும் தொழிலாளி நாராயணன் (வடமதுரை தோப்பூர்):-


ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் ஜூலை மாதம் வரை பதநீர் சீசன் ஆகும். அந்த காலக்கட்டத்தில் பனை மரத்தில் இருந்து பதநீர் சேகரிக்கப்பட்டு, நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்கிறோம். மேலும் பதநீர் மூலம் கருப்பட்டி தயாரிக்கிறோம். ஆனால் கருப்பட்டிக்கு நிரந்தர விலை இல்லை. இதனால் குறைந்த விலைக்கு, தனிநபர்களிடம் விற்பனை செய்ய வேண்டிய நிலைக்கு பனைமரத்தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். மேலும் இந்த தொழிலாளர்களுக்கு தேவையான கருவிகள் அரசு சார்பில் வழங்கப்படுவதில்லை என்ற புகார் எதிரொலிக்கிறது. குறிப்பாக அரிவாள், கடிப்பு, அரிவாள்பெட்டி, சுண்ணாம்பு பெட்டி, போட்டேறி டின், வைத்தேறி டின், முறுக்குதட்டி, கொப்பரை, அகப்பை உள்ளிட்ட பொருட்களை வழங்க வேண்டும்.


சுண்டி இழுக்கும் சுவை கொண்ட பனம்பழத்தில் இருந்து பழச்சாறு தயாரித்து விற்க வேண்டும். பல்வேறு சத்துக்களை தன்னகத்தே கொண்ட பனங்கிழங்குகளை அவித்து, பொடியாக்கி மாவாக தயாரித்து விற்பனை செய்ய முன்வர வேண்டும். உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும் சுவை மிகுந்த நுங்கில் இருந்து, மதிப்புக்கூட்டு பொருளை உருவாக்க வேண்டும். அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய பனங்குருத்து, தவுண் விற்பனையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பனை ஓலையால் உருவாக்கப்படுகிற கலைநயமிக்க பொருட்களை விற்பனை செய்ய அங்காடிகளை திறக்க வேண்டும். மட்டை, நார் விற்க வழிவகை செய்ய வேண்டும். எல்லா இடத்திலும் பனைபொருட்கள் கிடைக்கும் என்ற நிலையை உருவாக்க அரசு முன்வர வேண்டும். புயல், மழைகாலத்தில் இந்த தொழிலில் ஈடுபடுவோருக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.


அரசே நேரடி கொள்முதல்


சண்முகம் (சமூக ஆர்வலர், கோவிலூர்): கடந்த 1983-ம் ஆண்டு கோவிலூர் அருகே உள்ள சுக்காம்பட்டியில், தமிழக அரசின் சார்பில் பனங்கருப்பட்டி கூட்டுறவு விற்பனை சம்மேளனம் தொடங்கப்பட்டது. ஆனால் இந்த சம்மேளனம் தொடங்கிய சில வருடங்களிலேயே பூட்டப்பட்டது. இதனால் தாங்கள் தயாரிக்கும் கருப்பட்டியை குறைந்த விலைக்கு தனியாரிடம் விற்கும் சூழலுக்கு தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.


எனவே பூட்டப்பட்ட பனங்கருப்பட்டி கூட்டுறவு விற்பனை சம்மேளனத்தை மீண்டும் திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். பனைமர தொழிலாளர்களிடம் இருந்து அரசே கருப்பட்டியை நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.


பனை ஆராய்ச்சி மையம்


பிரகலாதன் (மதுரை, விருதுநகர், திண்டுக்கல் மாவட்ட பனைவெல்லம் கூட்டுறவு விற்பனை சம்மேளனம் தலைவர்): கருப்பட்டி தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் முன்னேற்றத்துக்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மீனவர்கள், நெசவாளர்கள், மண்பாண்ட தொழிலாளர்கள் ஆகியோருக்கு வழங்குவதை போல பனைமரத்தொழிலாளர்களுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும். ஓய்வூதியம் கொடுக்க வேண்டும்.


மாவட்டந்தோறும் பனை ஆராய்ச்சி மையம் ஏற்படுத்த வேண்டும். பதநீர், கருப்பட்டி, பனங்கற்கண்டு ஆகியவற்றை பனைவெல்ல கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். உடலுக்கு ஆரோக்கியம் தரும் கள் இறக்கி விற்பனை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும். பனைமரத்தொழிலாளர்களுக்கு மானியத்துடன் கடன் வழங்க வேண்டும்.



இவ்வாறு அவர்கள் கூறினர்.



Next Story