சிறுமியை விடுதியில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை


சிறுமியை விடுதியில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை
x

சிறுமியை விடுதியில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை

திருப்பூர்

காங்கயம்

வீட்டில் கோபித்துக்கொண்டு சென்னை சென்ற சிறுமியை விடுதியில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கைதான சென்னையை சேர்ந்த வாலிபர் போலீசாரிடம் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

போக்சோவில் கைது

திருப்பூர் மாவட்டம் காங்கயம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக சென்னையை சேர்ந்த விஷ்ணு (வயது 21) என்பவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் கிடைத்த திடுக்கிடும் தகவல் குறித்து போலீசார் கூறியதாவது:-

காங்கயம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி வீட்டில் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். பின்னர் சென்னைக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றார். அப்போது சிறுமியை சென்னையை சேர்ந்த விஷ்ணு என்பவர் விசாரித்துள்ளார். அப்போது சிறுமி வீட்டை விட்டு ஓடி வந்தது தெரியவந்தது. அதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட விஷ்ணு, சிறுமியிடம் வேலை வாங்கி தருவதாக கூறி ஆசை வார்த்தை கூறி அவரை ஒரு விடுதிக்கு அழைத்து சென்றார். அங்கு அவருக்கு உதவி செய்வது போல் விடுதியில் தங்க வைத்து கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பஸ்சில் அனுப்பி வைத்தார்

பின்னர் விஷ்ணு அந்த சிறுமியை சென்னையில் இருந்து திருப்பூருக்கு பஸ்சில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளார். வீட்டிற்கு வந்த சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுமியின் பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் சிறுமியிடம் பெற்றோர் விசாரித்ததில் விஷ்ணு என்ற வாலிபர் தன்னை வேலை வாங்கி தருவதாக கூறி ஆசை வார்த்தை பேசி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

கைதான விஷ்ணு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

----


Next Story