குடம் தலையில் சிக்கி பரிதவித்த நாய்
நாகர்கோவிலில் குடம் தலையில் சிக்கியதால் நாய் பரிதவித்தது. இந்த குடத்தை தீயணைப்பு வீரர்கள் அகற்றினர்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் குடம் தலையில் சிக்கியதால் நாய் பரிதவித்தது. இந்த குடத்தை தீயணைப்பு வீரர்கள் அகற்றினர்.
நாயின் தலை குடத்தில் சிக்கியது
நாகர்கோவில் தம்மத்துக்கோணம் தாராவிளை பகுதியில் சுற்றித்திரியும் ஒரு நாய் நேற்றுமுன்தினம் உணவுக்காக அலைந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் கிடந்த ஒரு சில்வர் குடத்துக்குள் எதிர்பாராத விதமாக தலையை விட்டது.
பின்னர் அந்த நாயால் குடத்தில் இருந்து தலையை வெளியே எடுக்க முடியவில்லை. அதாவது நாயின் தலை குடத்திற்குள் சிக்கிக்கொண்டது. இதனால் பரிதவித்த அந்த நாய் அங்குமிங்கும் ஓடியது. பின்னர் அந்த நாயை காணவில்லை.
அகற்றம்
நேற்று மதியம் மீண்டும் அந்த பகுதியில் தலையில் குடம் மாட்டிய நிலையில் நாய் சுற்றியதை பொதுமக்கள் பார்த்தனர். உடனே அவர்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு உதவி மாவட்ட அலுவலர் துரை தலைமையிலான வீரர்கள் உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
பின்னர் நாயின் தலையில் சிக்கியிருந்த இருந்த சில்வர் குடத்தை லாவகமாக அகற்றி நாயை மீட்டனர். இதை தொடர்ந்து நாய், வாலை ஆட்டியபடி தீயணைப்பு வீரர்களுக்கு நன்றி தெரிவித்தது போல் அங்கிருந்து உற்சாகத்துடன் ஓடியது. மேலும் தீயணைப்பு வீரர்களை பொதுமக்களும் பாராட்டினர்.