பள்ளி மாணவனை மது போதையில் தாக்கிய போலீஸ்காரர்

மஞ்சூரில் பள்ளி மாணவனை மது போதையில் போலீஸ்காரர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மஞ்சூர்,
மஞ்சூரில் பள்ளி மாணவனை மது போதையில் போலீஸ்காரர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மாணவன் மீது தாக்குதல்
நீலகிரி மாவட்டம் ஊட்டி அடுத்த மஞ்சூர் தங்காடு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (விவசாயி). இவருடைய மகன் குஷால் (வயது 8). இவன் மஞ்சூர் மின்வாரிய மேல் முகாமில் உள்ள தொடக்கப்பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்தநிலையில் நேற்று குஷால் பள்ளிக்கூடம் செல்வதற்காக வீட்டில் இருந்து குந்தா அணை வழியாக நடந்து சென்றான்.
அப்போது குந்தா அணையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீஸ்காரர் துரைப்பாண்டி என்பவர் மாணவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். மேலும் ஒரு கட்டத்தில் ஆத்திரத்தில் போலீஸ்காரர் மாணவனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவன் பள்ளிக்கூடம் செல்லாமல், இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளான்.
விசாரணை நடத்த உத்தரவு
இதைத்தொடர்ந்து சதீஷ் தனது மகனை மஞ்சூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து மஞ்சூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதற்கிடையே மது போதையில் இருந்த போலீஸ்காரர் பள்ளி மாணவனை தாக்கினார் என்று கூறப்பட்டதால், அங்கு பொதுமக்கள் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே போலீஸ்காரர் துரைப்பாண்டி மது போதையில் இருந்தாரா என்பது குறித்து பரிசோதனை செய்வதற்காக, அவரை மஞ்சூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சம்பந்தம் தலைமையிலான போலீசார் மஞ்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். இதில் அவர் மது குடித்திருந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் கூறுகையில், பள்ளி மாணவனை போலீஸ்காரர் தாக்கியதாக புகார் கூறப்பட்டு உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளேன். விசாரணை முடிவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.