ரூ.4 லட்சம் கடனாக பெற்றுக்கொண்டு மிரட்டல் விடுக்கும் போலீஸ்காரர்


ரூ.4 லட்சம் கடனாக பெற்றுக்கொண்டு மிரட்டல் விடுக்கும் போலீஸ்காரர்
x

ரூ.4 லட்சம் கடனாக கொடுத்த பணத்தை திருப்பி கேட்டால் மிரட்டல் விடுக்கும் ஆயுதப்படை போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் நகை மதிப்பீட்டாளர் புகார் மனு அளித்தார்.

வேலூர்

குறைதீர்வு கூட்டம்

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணண் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் முன்னிலை வகித்தார். இருவரும் பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்று அவர்களிடம் அதுதொடர்பாக கேட்டறிந்தனர்.

கூட்டத்தில் வேலூர் அரசமரபேட்டை பகுதியை சேர்ந்த ஜெயசந்திரன் அளித்த மனுவில், நான் வேலூர் நகர கூட்டுறவு வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிகிறேன். எனக்கு 4 மகள்கள் உள்ளனர். காட்பாடி ஆயுதப்படையில் பணிபுரியும் போலீஸ்காரர் ஒருவரை கடந்த 7 ஆண்டுகளாக தெரியும். அதன்பேரில் அவர் குடும்பம் மற்றும் சொந்த தேவைக்காக 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.4 லட்சம் கடனாக பெற்றார். அதற்கு உத்திரவாதமாக 2 காசோலைகள் வழங்கினார். அவர் கூறியபடி பணத்தை திருப்பி கொடுக்கவில்லை.

மிரட்டல் விடுக்கிறார்

இதையடுத்து அவருடைய காசோலையை வங்கியில் செலுத்தியபோது அவருடைய வங்கிக்கணக்கில் பணம் இல்லாமல் திரும்பி வந்துவிட்டது. கொடுத்த பணத்தை திரும்ப கேட்டால் கொடுக்காமல் காலம் கடத்தி ஏமாற்றி வருகிறார். அவரிடம் சென்று பணம் கேட்டால் ஏதாவது வழக்கில் சிக்க வைத்து விடுவேன் என்று மிரட்டல் விடுக்கிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை திரும்ப பெற்றுத் தரவேண்டும் என்று கூறியிருந்தார்.

சத்துவாச்சாரி வள்ளலார் பகுதியை சேர்ந்த ரமேஷ் அளித்த மனுவில், சத்துவாச்சாரி பகுதி-3 வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வருங்கால வைப்புநிதி அலுவலகம் செல்லும் சாலையோரம் இருந்த நிழல் தரும் 10 மரங்களை மர்மநபர்கள் வெட்டி லாரியில் கடத்தி சென்று விட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று தெரிவித்திருந்தார்.

மதுபோதையில் வாகனம் ஓட்டிய நபர்...

ஆம்பூர் அருகே உள்ள வெங்கடசமுத்திரத்தை சேர்ந்த குணா என்பவர் அளித்த மனுவில், நான் கடந்த ஜூன் மாதம் 8-ந் தேதி மோட்டார் சைக்கிளில் அண்ணன் நாகேந்திராவுடன் ஆம்பூரில் இருந்து மாதனூருக்கு சென்று கொண்டிருந்தேன். பள்ளிகொண்டா அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது மோட்டார் சைக்கிளில் மதுபோதையில் வந்த நபர் எனது மோட்டார் சைக்கிள் மீது மோதினார்.

இந்த விபத்தில் நானும், அண்ணனும் பலத்த காயமடைந்தோம். பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் எதிர்தரப்பினர் கொடுத்த புகாரின்பேரில் என் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. மாதனூர் அரசு மருத்துவமனையில் அந்த நபர் மதுபோதையில் இருந்தார் என்று குறிப்பிட்டிருந்தும், அவர் மீது வழக்குப்பதியவில்லை. எனவே அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.


Next Story