இருசக்கர வாகனத்திற்குள் புகுந்த பாம்பு

இருசக்கர வாகனத்திற்குள் புகுந்த பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் அடுத்த அருமைக்காரன் புதூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் பணி நிமித்தமாக, கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் வடக்கு பகுதியில் தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு சென்றிருந்தார். அப்போது அப்பகுதியில் உள்ள புதர் மண்டிய பகுதியில் இருந்து வெளியே வந்த பாம்பு ஒன்று அவரது இருசக்கர வாகனத்திற்குள் சென்றதை அப்பகுதி மக்கள் கண்டுள்ளனர்.இதுகுறித்து ரமேஷிடம் அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து ரமேஷ் மற்றும் பொதுமக்கள் கைகளில் கிடைத்த குச்சி உள்ளிட்ட பொருட்களை கொண்டு சுமார் ஒரு மணி நேரமாக பாம்பை வெளியேற்ற போராடினர். ஆனால் இரு சக்கர வாகனத்தில் இருந்து பாம்பு வெளியே வரவில்லை. இதுகுறித்து கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் அரை மணி நேரம் போராடி, இருசக்கர வாகனத்திற்குள் புகுந்த பாம்பினை லாவகமாக உயிருடன் பிடித்தனர்.