மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் பெரம்பலூரில் நாளை நடக்கிறது

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் பெரம்பலூரில் நாளை நடக்கிறது.
பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஆகியவை இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான மாபெரும் சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நாளை (வௌ்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் பெரம்பலூரில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. முகாமில் 40-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 1,200-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளனர். தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இலவச பயிற்சிக்கான பதிவு, அரசு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சிக்கான பதிவு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்படும் உதவி உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அரங்கம் முகாமில் இடம் பெற உள்ளது. எனவே பெரம்பலூர் மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய சுய விவர குறிப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், கல்வி சான்று ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம், என்று கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.