சாலை விபத்தில் வாலிபர் பலி

சாலை விபத்தில் வாலிபர் பலியானார்
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே கோட்டைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் வீரப்பன். இவரது மகன் பழனிவேல்(வயது 35). இவர், சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர் பணி முடிந்து பேராவூரணியில் இருந்து தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். ஆண்டவன்கோவில் நெல் கொள்முதல் நிலையத்தின் அருகே சென்றபோது அங்கு நெல் மூட்டைகள் இறக்குவதற்காக நின்று கொண்டு இருந்த டிராக்டர் மீது பழனிவேல் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது.
பரிதாப சாவு
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பழனிவேல் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பேராவூரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பழனிவேல் உடலை கைப்பற்றி பேராவூரணி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்தில் இறந்த பழனிவேலுக்கு நந்தினி(30) என்ற மனைவியும், 3 வயதில் ஒரு குழந்தையும், 3 மாதத்தில் ஒரு கைக்குழந்தையும் உள்ளனர்.