வீடுபுகுந்து வாலிபர் சரமாரி குத்திக்கொலை


தினத்தந்தி 18 Oct 2022 12:15 AM IST (Updated: 18 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கயத்தாறில் வீடுபுகுந்து வாலிபர் சரமாரியாக குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கல்லூரி மாணவர்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

கயத்தாறு:

கயத்தாறில் வீடுபுகுந்து வாலிபர் சரமாரியாக குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கல்லூரி மாணவர்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

சமையல் தொழிலாளி

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருடைய மனைவி ரேவதி. இவர்களுக்கு சுரேஷ் (22) என்ற மகனும், 1 மகளும் உண்டு.

சுரேஷ் கேட்டரிங் படித்து விட்டு, சமையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். மேலும் வெள்ளாளர் முன்னேற்ற கழக மாவட்ட பொருளாளராக இருந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாலசுப்பிரமணியன் இறந்து விட்டார். இதனால் சுரேஷ் வேலைக்கு சென்று தாயாரையும், தங்கையையும் காப்பாற்றி வந்தார்.

முன்விரோதம்

பாளையங்கோட்டை சாந்திநகரைச் சேர்ந்தவர் சுடலைமுத்து மகன் பரமசிவம் என்ற பந்தல்ராஜா (34). இவர் வெள்ளாளர் முன்னேற்ற கழக மாநில அமைப்பு செயலாளராக உள்ளார்.

சமீபத்தில் கயத்தாறு பகுதியில் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் விழா கொண்டாடியபோது சுரேஷ், சிறப்பு அழைப்பாளராக பரமசிவத்தை அழைக்காமல் மதுரையைச் சேர்ந்த மாநில மகளிரணி செயலாளர் அன்னலட்சுமியை அழைத்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்தது.

கத்தியால் குத்திக்கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் சுரேஷின் வீட்டுக்கு பரமசிவம் உள்ளிட்டவர்கள் சென்றனர். அப்போது சுரேசுக்கும், பரமசிவத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பரமசிவம் உள்ளிட்டவர்கள் கத்தியால் சுரேஷை சரமாரியாக குத்தினர். பின்னர் அவர்கள் தப்பி ஓடி விட்டனர்.

இதனைப் பார்த்த சுரேஷின் தாயார், தங்கை கதறி அழுதனர். பலத்த காயமடைந்த சுரேஷை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

6 பேர் கைது

இதுகுறித்து தகவல் அறிந்ததும், கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் போலீசார் விரைந்து சென்று, சுரேஷின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

சுரேஷ் கொலை தொடர்பாக, பரமசிவம் மற்றும் அவரது ஆதரவாளர்களான கயத்தாறு சுடலைமாடன் கோவில் தெருவைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் அஜித் கண்ணன் (27), பாளையங்கோட்டை எம்.கே.ஆர்.நகர் காமராஜர் தெருவைச் சேர்ந்த செபஸ்டின் ஆசீர் மகன் மார்ட்டின் (22), பாளையங்கோட்டை கண்ணம்மாபிள்ளை நயினார் தெருவைச் சேர்ந்த பரமசிவம் மகன் இசக்கிராஜா (27), கயத்தாறு கோட்டைபிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த வெயில்முத்து (44), மாரியப்பன் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைதானவர்களில் மார்ட்டின் பெங்களூருவில் உள்ள சட்ட கல்லூரியில் 2-ம் ஆண்டும், மாரியப்பன் நெல்லையில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டும் படித்து வருகின்றனர். இசக்கிராஜா மருந்து விற்பனை பிரதிநிதியாகவும், அஜித் கண்ணன் கார் டிரைவராகவும் வேலை செய்து வருகின்றனர்.

2 பேருக்கு வலைவீச்சு

மேலும் தலைமறைவான பிரபாகரன், ஜெயமணி ஆகிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கயத்தாறில் வீடுபுகுந்து வாலிபரை சரமாரியாக கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story