நெய்யூர் தபால் நிலையத்தில் கதவை உடைத்து செல்போன் திருடிய வாலிபர் கைது

நெய்யூர் தபால் நிலையத்தில் கதவை உடைத்து செல்போன் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திங்கள்சந்தை,
நெய்யூர் தபால் நிலையத்தில் கதவை உடைத்து செல்போன் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தபால் நிலையத்தில் திருட்டு
திங்கள்சந்தை அருகே நெய்யூர் தபால் நிலையம் உள்ளது. இந்த நிலையத்தில் போஸ்ட் மாஸ்டராக கமலாபாய் (வயது58) என்பவர் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று தபால் நிலையத்தின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. இதைகண்டு அதிர்ச்சி அடைந்த கமலாபாய் உள்ளே சென்று பார்த்தார். அப்போது, லாக்கர் அறையின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
உடனே இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கும், இரணியல் போலீஸ் நிலையத்திற்கும் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது, அலுவலகத்தில் இருந்த செல்போன் திருட்டு போனது தெரியவந்தது.
வாலிபர் கைது
இதையடுத்து கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்து ஆய்வு செய்தனர். அப்போது, வெள்ளிச்சந்தை போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள திங்கள்நகர் பறயம்விளையை சேர்ந்த வில்சன் (35) என்ற வாலிபரின் கைரேகையுடன் ஒத்துப்போனது. இதையடுத்து போலீசார் கோர்ட்டு உத்தரவின் பேரில் அவரிடம் விசாரணை நடத்தினர்.
அதில் நெய்யூர் தபால் நிலையத்தில் வில்சன் செல்போன் திருடியதை ஒப்பு கொண்டார். அதைதொடர்ந்து வில்சனை போலீசார் கைது செய்து இரணியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.