சாலையில் மரம் விழுந்தது; போக்குவரத்து பாதிப்பு

குலசேகரத்தில் சாலையில் மரம் விழுந்தது; போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
குலசேகரம்:
குலசேகரத்தில் சாலையில் மரம் விழுந்தது; போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
குலசேகரம் கான்வென்ட் சந்திப்பு அருகே குலசேகரம்-மார்த்தாண்டம் சாலை உள்ளது. எப்போதும் வாகன போக்குவரத்துடன் பரபரப்பாக காணப்படும் இந்த சாலைேயாரத்தில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் ராட்சத ரப்பர் மரம் ஒன்று நின்றது. நேற்று காலையில் திடீரென அந்த ரப்பர் மரம் குலசேகரம்-மார்த்தாண்டம் சாலையில் சாய்ந்தது. மேலும், மரம் சாய்ந்ததில் மின்கம்பம் ஒன்றும் முறிந்து விழுந்து மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. இதனால், அந்த வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதுபற்றி தகவலறிந்த மின் வாரியத்தினர் உடனடியாக அந்த பகுதியில் மின்வினியோகத்தை துண்டித்தனர். இதையடுத்து அந்த பகுதி பொதுமக்கள் மரக்கிளைகளை வெட்டி டெம்போ உதவியுடன் கட்டி இழுத்து அப்புறப்படுத்தினர். மின்வாரிய ஊழியர்களும் மின்கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மரம் சாய்ந்தபோது அதிர்ஷ்டவசமாக சாலையில் நடந்து சென்ற பள்ளி மாணவர்கள் உள்பட யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் சுமார் 45 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.