ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் துணை தாசில்தார் கைது
விவசாய நிலத்தை தரிசாக மாற்றி தர ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் துணை தாசில்தாரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
தக்கலை:
விவசாய நிலத்தை தரிசாக மாற்றி தர ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் துணை தாசில்தாரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
விவசாய நிலத்தை மாற்ற...
குமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே உள்ள கண்டன்விளை மடவிளாகம் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரி. இவருடைய அக்காள் மகன் ராகுல் (வயது 27), வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவருக்கு கண்டன்விளையில் 7 சென்ட் நிலம் உள்ளது. இதில் அவர் வீடு கட்டி வருகிறார்.
இந்தநிலையில் அந்த இடம் விவசாய நிலமாக இருப்பதால் வரைபட அனுமதி பெற முடியவில்லை. இதனையடுத்து விவசாய நிலத்தை தரிசு நிலமாக மாற்றித்தர வருவாய்த்துறையிடம் ராகுல் விண்ணப்பம் செய்தார்.
பின்னர் சம்பந்தப்பட்ட நிலத்தை கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஆய்வாளர் ஆய்வு செய்து அதன் கோப்புகளை கல்குளம் தாலுகா அலுவலகத்திற்கு அனுப்பினர். ஆனால் இந்த விண்ணப்ப மனு தொடர்பான விவரத்தை துணை தாசில்தார் ருக்மணி (45) விசாரணை நடத்தாமல் கிடப்பில் போட்டுள்ளார்.
லஞ்சம் வாங்கிய துணை தாசில்தார்
இதனை அறிந்த ராகுலின் சித்தி ஜெகதீஸ்வரி, துணை தாசில்தார் ருக்மணியை சந்தித்து ராகுலின் விண்ணப்ப மனுவுக்கு உரிய தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அதற்கு அவர் ரூ.25 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். உடனே ஜெகதீஸ்வரி பணம் கொடுக்க ஏற்பாடு செய்வதாக கூறி விட்டு அங்கிருந்து புறப்பட்டார்.
ஆனால் லஞ்சம் கொடுக்க மனமில்லாத ஜெகதீஸ்வரி இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் அளித்தார். தொடர்ந்து ரசாயனம் தடவிய ரூ.25 ஆயிரம் மதிப்பிலான நோட்டுகளை ஜெகதீஸ்வரியிடம் வழங்கிய லஞ்ச ஒழிப்பு போலீசார், இந்த பணத்தை துணை தாசில்தார் ருக்மணியிடம் சென்று கொடுக்கும்படி தெரிவித்தனர்.
அதன்படி நேற்று மதியம் 12.40 மணிக்கு தாலுகா அலுவலகம் சென்ற ஜெகதீஸ்வரி, லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியபடி துணை தாசில்தார் ருக்மணியிடம் ரூ.25 ஆயிரத்தை கொடுத்தார். அதனை அவர் வாங்கிக் கொண்டார்.
அதிரடி கைது
இந்தநிலையில் அங்கு ஏற்கனவே கண்காணித்துக் கொண்டிருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு ஹெக்டர் தர்மராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் சிவசங்கரி, சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் அதிரடியாக அலுவலகத்திற்குள் நுழைந்து துணை தாசில்தார் ருக்மணியை கையும், களவுமாக பிடித்தனர்.
பின்னர் அவரிடமிருந்து ரூ.25 ஆயிரம் லஞ்ச பணத்தையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தாலுகா அலுவலகத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. வேறு யாரிடமும் லஞ்சம் வாங்கியுள்ளாரா? என கணக்கு விவரங்களை சரிபார்த்தனர். சுமார் 6 மணி நேரம் அங்கு ஆய்வு நடந்தது.
மேலும் இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக பெண் துணை தாசில்தார் சிக்கிய சம்பவம் குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.