பிலிப்பைன்ஸ் பெண்ணை காதலித்து மணந்த கடலூர் வாலிபர்


பிலிப்பைன்ஸ் பெண்ணை காதலித்து மணந்த கடலூர் வாலிபர்
x

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண்ணை காதலித்து கடலூர் வாலிபர் தமிழ் கலாசாரப்படி திருமணம் செய்து கொண்டார்.

கடலூர்,

கடலூர் அருகே உள்ள திருமாணிக்குழி டி.புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பத்மநாபன்(வயது 28). எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அப்போது அங்கு பணிபுரியும் சக ஊழியரான பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ரோனமி டியாங்கோ குவாங்கோ(25) என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட்டது. அவருக்கும் பத்மநாபனை பிடிக்கவே, இருவரும் ஓராண்டாக உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர்.

பின்னர் இருவரும் காதல் திருமணம் செய்வது குறித்து தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்தனர். இருவீட்டாரும் காதலுக்கு பச்சைக்கொடி காட்டவே, தமிழ் கலாசாரப்படி மணமகன் வீட்டில் திருமணம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.

தமிழ் கலாசாரப்படி திருமணம்

இதற்காக காதலி மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களை பத்மநாபன் கடலூருக்கு அழைத்து வந்தார். இதையடுத்து நேற்று பத்மநாபனுக்கும், ரோனமி டியாங்கோ குவாங்கோவுக்கும் கடலூர் அருகே உள்ள நடுவீரப்பட்டு திருமண மண்டபத்தில் இந்து முறைப்படியும், தமிழ் கலாசாரப்படியும் திருமணம் நடந்தது. மணப்பெண் தமிழ்நாட்டு பெண் போலவே சேலை அணிந்து பாரம்பரிய முறைப்படி வந்திருந்தது அங்கிருந்தவர்களை ரசிக்க வைத்தது.

மணமக்களை உறவினர்கள், நண்பர்கள் அட்சதை தூவி வாழ்த்தினார்கள்.

திருமணத்தின்போது பிலிப்பைன்ஸ் மற்றும் சிங்கப்பூர் நாட்டை சேர்ந்தவர்கள் தமிழ் கலாசார முறைப்படி வேட்டி, சேலை அணிந்து கலந்து கொண்டது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

மணமகள் மகிழ்ச்சி

மணமகள் ரோனமி டியாங்கோ குவாங்கோ கூறுகையில்:-

தமிழ் கலாசாரம் மற்றும் இந்து முறைப்படி திருவிழா போல் நடந்த எங்களது திருமணத்தில் அனைவரும் கலந்து கொண்டு வாழ்த்தியது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. இங்குள்ள கலாசாரம் மிகவும் நன்றாக உள்ளது. எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

இந்த திருமணத்தில் மணமகளின் பெற்றோர் வயது முதிர்வு காரணமாக கலந்து கொள்ளவில்லை. இதனால் நேற்று நடந்த திருமணத்தை அவர்கள் ஆன்லைன் வீடியோவில் நேரலையாக கண்டதுடன், மணமக்கள் இருவரையும் வாழ்த்தினர்.


Next Story