கொலை வழக்கில் தலைமறைவாக பெருந்துறையில் பதுங்கி இருந்த வடமாநில வாலிபர் சிக்கினார்


கொலை வழக்கில் தலைமறைவாக   பெருந்துறையில் பதுங்கி இருந்த வடமாநில வாலிபர் சிக்கினார்
x
தினத்தந்தி 20 Sept 2022 1:00 AM IST (Updated: 20 Sept 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

கொலை வழக்கில் தலைமறைவு

ஈரோடு

மேற்கு வங்காள மாநிலம், வடக்கு பர்கானா மாவட்டம், பசிரத் பகுதியை சேர்ந்தவர் ஜஹாங்கீர் சர்தார் (வயது 34). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அவரது ஊரில் நடந்த கொலை வழக்கு ஒன்றில், மேற்கு வங்காள போலீசாரால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து அவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

இந்தநிலையில், ஜஹாங்கீர் சர்தார் அங்கிருந்து தப்பி, ஈரோடு மாவட்டம் பெருந்துறை பணிக்கம்பாளையத்துக்கு வந்து விட்டார். அதன்பிறகு அவர் பெருந்துறையில், கடந்த 5 மாதங்களாக பதுங்கி இருந்து கட்டிட தொழிலாளியாக வேலைக்கு சென்று வந்தார்.

இதுபற்றிய ரகசிய தகவல் மேற்கு வங்காள போலீசாருக்கு கிடைத்தது. தகவல் கிடைத்ததும் மேற்கு வங்காள போலீசார் நேற்று முன்தினம் பெருந்துறைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதா பேகத்தை சந்தித்து, தங்களது மாநிலத்தை சேர்ந்த கொலை குற்றவாளி ஜஹாங்கீர் சர்தார், பெருந்துறையில் பதுங்கியிருப்பது குறித்து அவரிடம் விளக்கி கூறினர். அதுமட்டுமின்றி அவரை கைது செய்து மேற்கு வங்காளத்துக்கு அழைத்து செல்ல உள்ளூர் போலீசாரின் உதவியையும் நாடினர்.

இதையடுத்து, பெருந்துறை போலீசாரின் உதவியுடன், மேற்கு வங்க போலீசார், பணிக்கம்பாளையத்திற்கு சென்று, அங்கிருந்த ஜஹாங்கீர் சர்தாரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஜஹாங்கீர் சர்தார் பெருந்துறை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இதுதொடர்பான வழக்கை மாஜிஸ்திரேட்டு விபிஷி விசாரித்து ஜஹாங்கீர் சர்தாரை, மேற்கு வங்காளத்துக்கு அழைத்து செல்ல போலீசாருக்கு அனுமதி அளித்தார்.


Next Story