பள்ளி மாணவர்களின் கல்வி பாதிப்பு


பள்ளி மாணவர்களின் கல்வி பாதிப்பு
x
தினத்தந்தி 10 Jan 2023 12:15 AM IST (Updated: 10 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சாதி சான்றிதழ் வழங்கப்படாததால், பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் பழங்குடியின மக்கள் மனு அளித்தனர்.

நீலகிரி

ஊட்டி,

சாதி சான்றிதழ் வழங்கப்படாததால், பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் பழங்குடியின மக்கள் மனு அளித்தனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 106 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. உல்லத்தி ஊராட்சிக்கு உட்பட்ட அம்மநாடு பகுதி இருளர், குரும்பர் இன மக்கள் கொடுத்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

அம்மநாடு பகுதியில் உள்ள இருளர் மற்றும் குரும்பர் இன மாணவர்களுக்கு சாதி சான்றிதழ் இல்லை. தொடக்க நிலை வகுப்புகளில் சேருபவர்களுக்கு, சாதி சான்றிதழ் இல்லாத காரணத்தால் தற்போதும், வருங்காலத்தில் மேற்படிப்புக்கு செல்லும்போதும் கல்வி பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த பிரச்சினைக்காக 6 ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட துறைக்கு பல முறை விண்ணப்பித்தும் இதுவரை சாதி சான்றிதழ் கிடைக்கவில்லை. சாதி சான்றிதழ் கிடைக்கும் வரை, எங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப இயலாத நிலையில் உள்ளோம்.

சாதி சான்றிதழ்

தாவணெ, ஏக்குணி, உல்லத்தி மற்றும் ஊட்டியில் உள்ள பள்ளிகளுக்கு சென்று கல்வி கற்க எங்களது குழந்தைகள் பயன்பெறும் வகையில் சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கீழ் தலையாட்டுமந்து பகுதியை சேர்ந்த அமுதா என்பவர் கொடுத்த மனுவில், எனது கணவர் நகராட்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த போது இறந்துவிட்டார். தற்போது கருணை அடிப்படையில் அவரது வாரிசுக்கு பணி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

நீலகிரி மாவட்ட சுற்றுலா வழிகாட்டுனர்கள் சங்க தலைவர் பீட்டர் பிரான்சிஸ் மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:- நாங்கள் அரசாங்கத்தில் பதிவு செய்து சீருடை அணிந்து சுற்றுலா பயணிகளை அணுகி, அவர்களை சுற்றுலா தலங்களுக்கு அழைத்து சென்று வருகிறோம். மேலும் தங்கும் விடுதிகளில் தங்க வைத்து, அவர்களது மொழிகளில் பேசி உதவி செய்கிறோம். இதற்கிடையே கலெக்டர் அலுவலகம் அருகே சிலர் சாலையில் நின்று கொண்டு, எங்களுக்கு இடையூறாக செயல்படுகின்றனர். இதை கேட்டால் எங்களை மிரட்டுகின்றனர். தனியார் விடுதி உரிமையாளர்கள் போலி வழிகாட்டிகளை நியமித்து இவ்வாறு செயல்படுகிறார்கள். எனவே, போலி சுற்றுலா வழிகாட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story