வாகனம் மோதி மாணவர் பலி

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பரமக்குடி,
பரமக்குடி பால்பண்ணை தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் ராஜ்குமார். இவரது நண்பர் சிவகங்கை மாவட்டம் பெரும்பச்சேரியை சேர்ந்த கரண் பாண்டியன். 2 பேரும் பரமக்குடியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து தேர்வு எழுதியுள்ளனர். தற்போது தேர்வு முடிவுக்காக காத்திருந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 2 பேரும் ராஜ்குமாருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் ராமநாதபுரம் சென்றுவிட்டு இரவு திரும்பி பரமக்குடிக்கு வந்தனர். அப்போது இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பரமக்குடி அருகே உள்ள சரஸ்வதி நகர் சாலையில் வரும் போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் நிலை தடுமாறி 2 பேரும் கீழே விழுந்தனர். அதில் ராஜ்குமார் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து வந்த கரண்பாண்டியன் காயத்துடன் உயிர் தப்பினார்.இதுபற்றிய தகவல் அறிந்ததும் பரமக்குடி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த ராஜ்குமார் மற்றும் படுகாயம் அடைந்த கரண் பாண்டியன் ஆகியோரை மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பரமக்குடி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.