திருமண விழா கூட்டத்தில் கார் புகுந்து வாலிபர் பலி; 7 பேர் காயம்

தேவகோட்டை அருகே திருமண விழா கூட்டத்தில் கார் புகுந்து வாலிபர் பலியானார். 7 பேர் காயம் அடைந்தனர்.
தேவகோட்டை,
தேவகோட்டை அருகே திருமண விழா கூட்டத்தில் கார் புகுந்து வாலிபர் பலியானார். 7 பேர் காயம் அடைந்தனர்.திருமண நிகழ்ச்சி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அமராவதி புதூரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் சதீஷ் (வயது 26). வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு ஒரு வாரத்திற்கு முன்புதான் ஊருக்கு வந்திருந்தார்.
அதே பகுதி மணிக்காரன்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக் (29). சென்டிரிங் தொழிலாளி. இவர்கள் இருவரும் திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் சங்கரபதி கோட்டை அருகே உள்ள ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மண்டபத்தின் முன்பு மோட்டார்சைக்கிளில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது காரைக்குடியில் உள்ள ஒரு வங்கியில் துணை மேலாளராக பணிபுரியும் தேவகோட்டையை சேர்ந்த சோமசுந்தரம் (58), அவரது மனைவி முத்துலட்சுமி (52) ஆகியோர் காரைக்குடியில் ஒரு திருமணத்திற்கு சென்று விட்டு தேவகோட்டை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர். சோமசுந்தரம் காரை ஓட்டி வந்தார்.
வாலிபர் பலி
இந்நிலையில் திடீரென அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து ஓடியது. சாலையோரம் நின்ற சதீஷ், கார்த்திக் ஆகியோர் மீது பயங்கரமாக மோதியது. அதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர்.
மேலும், அங்கு திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் கூட்டமாக மண்டபத்தில் இருந்து ஒரு மினி லாரியில் ஏறிக்கொண்டிருந்தனர். அவர்கள் மீதும் கார் மோதியது. இதில் கவுசல்யா (35), யோகா (11), சதீஷ் (10) உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் காயம் அடைந்த அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதில் சிகிச்சை பலனின்றி வாலிபர் சதீஷ் பரிதாபமாக இறந்தார்.
முற்றுகை
அதே போல காரில் வந்த சோமசுந்தரம், அவரது மனைவி முத்துலட்சுமியும் காயம் அடைந்தனர். அவர்களை ஆம்புலன்சில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்ப முயன்றபோது சதீசின் உறவினர்கள் ஆம்புலன்சை வழிமறித்து முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்த ஆறாவயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், தேவகோட்டை நகர் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சோமசுந்தரம், முத்துலட்சுமியை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் திருமண விழா சோகமயமாகியது.