மேலூர் அருகே விபத்து: சுவரில் மோதி பள்ளத்தில் பாய்ந்த கார்;பெண் என்ஜினீயர்-டிரைவர் பலி - கணவர், குழந்தை உள்பட 3 பேர் காயம்


சுவரில் மோதி பள்ளத்தில் கார் பாய்ந்தது. இந்த சம்பவத்தில் பெண் என்ஜினீயர், டிரைவர் பலியானார்கள். அந்த என்ஜினீயரின் கணவர், குழந்தை, மாமியார் காயம் அடைந்தனர்.

மதுரை

மேலூர்

சுவரில் மோதி பள்ளத்தில் கார் பாய்ந்தது. இந்த சம்பவத்தில் ெபண் என்ஜினீயர், டிரைவர் பலியானார்கள். அந்த என்ஜினீயரின் கணவர், குழந்தை, மாமியார் காயம் அடைந்தனர்.

சென்னையில் இருந்து வந்தனர்

சென்னை திரு.வி.க. நகரில் உள்ள பி.வி.நகரை சேர்ந்தவர் ஹானஸ்ட்ராஜ் (வயது29). இவருடைய மனைவி பவானி (27). இருவரும் சாப்ட்வேர் என்ஜினீயர். இவர்களுடைய 10 மாத குழந்தை மகிழ்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஹானஸ்ட்ராஜின் உறவினர் வீட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக ஹானஸ்ட்ராஜ் தனது மனைவி, குழந்தையுடன் காரில் புறப்பட்டார். உடன் ஹானஸ்ட்ராஜின் தாயார் ஜெபராணியும் (47) வந்தார்.

இந்த காரை சென்னை பாரிமுனை பகுதியை சேர்ந்த பாலாஜி ஓட்டி வந்தார். இவரும் அவர்களுடைய உறவினர் எனக்கூறப்படுகிறது.

சுவரில் மோதி பாய்ந்தது

மதுரை மாவட்டம் மேலூர் அருகே நான்கு வழிச்சாலையில் முனிக்கோவில் பகுதியில் தற்போது பாலம் கட்டும் பணி நடைபெறுகிறது. இந்த இடத்தில் கார் வந்தபோது, கண் இமைக்கும் நேரத்தில் அருகில் இருந்த சிமெண்டு சுவர் மீது கார் பயங்கரமாக மோதி, பக்கவாட்டில் உள்ள கால்வாய் பள்ளத்தில் பாய்ந்து, உருண்டு விழுந்தது.

இந்த சம்பவத்தை அறிந்ததும் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, காரில் இருந்தவர்களை மீட்க முயன்றனர். காரில் முன் இருக்கையில் இருந்த என்ஜினீயர் பவானி, காரை ஓட்டி வந்த பாலாஜி ஆகியோர் படுகாயத்துடன் உயிருக்கு போராடினர். அவர்களை, மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

மேலும் காரில் இருந்த ஹானஸ்ட்ராஜ், அவருடைய குழந்தை மகிழ், தாய் ஜெபராணி ஆகியோர் காயத்துடன் தப்பினர். அவர்களும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விசாரணை

இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் மேலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆர்லியஸ் ரெபோனி, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தஜோதி, சுங்கச்சாவடி ரோந்து வாகன குழு கார்த்திக், ராஜேந்திரன் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்து, மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்த விபத்து குறித்து மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்து நடந்த இடத்தில் மேற்கொள்ளப்படும் சாலை பணிகள் குறித்து எவ்விதமான எச்சரிக்கை போர்டுகளோ, விபத்து தடுப்பு அமைப்புகளோ வைக்கப்படாததுதான் இச்சம்பவத்துக்கு காரணம் என அப்பகுதியை சேர்ந்த வாகன ஓட்டிகள் தெரிவித்தனர். அங்கு விபத்து தடுப்பு நடவடிக்கைகள் இல்லாததால், அடிக்கடி விபத்துகள் நடந்து வருவதாகவும் தெரிவித்தனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து உரிய அறிவிப்பு பலகைகள் உள்ளிட்டவற்றை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர். தாய் பலியானது அறியாமல் குழந்தை கதறியது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story