திண்டிவனம் அருகே விபத்து சாலையோர கடைக்குள் புகுந்த லாரி

திண்டிவனம் அருகே நடந்த விபத்தில் சாலையோர கடைக்குள் லாாி புகுந்தது.
பிரம்மதேசம்,
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இருந்து மரக்காணம் நோக்கி ஒரு டிப்பர் லாரி சென்று கொண்டிருந்தது. லாரியை குருவம்மாபேட்டையை சேர்ந்த விஜயன் மகன் மூர்த்தி என்பவர் ஓட்டினார். அப்போது மரக்காணம் சாலை அப்பாசாமி நகர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த புலியனூரை சேர்ந்த ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் தேசிங்கு (வயது 65) என்பவர், திண்டிவனம்-மரக்காணம் சாலையை கடக்க முயன்றார். இவர் மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் மூர்த்தி, லாரியை வலது புறமாக திருப்பியுள்ளார். இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, தேசிங்கு மீது மோதி விட்டு, சாலையோரம் இருந்த தாமஸ் என்பவரின் வீடு மற்றும் டீக்கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இதில் தேசிங்கு, லேசான காயமடைந்தார். இவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே லாரி டிரைவர், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். லாரி மோதிய வேகத்தில் வீடு மற்றும் டீக்கடை முன்பக்கம் முழுமையாக சேதமடைந்தது. விபத்து நடைபெற்ற போது கடை மூடி இருந்ததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து பிரம்மதேசம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.