குன்னூர் மலைப்பாதையில் விபத்து:100 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது; பெண் உள்பட 2 பேர் பலி-மேலும் 3 பேர் படுகாயம்

குன்னூர் மலைப்பாதையில் 100 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் பெண் உள்பட 2 சுற்றுலா பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
குன்னூர்
குன்னூர் மலைப்பாதையில் 100 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் பெண் உள்பட 2 சுற்றுலா பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த செங்குந்த பேட்டை குளக்கரை தெருவை சேர்ந்தவர் செந்தில் (வயது 48). இவர் தனது மனைவி பூங்காவனம் (35). உறவினரான சம்பத் (40), அவருடைய மனைவி சத்யா லட்சுமி (35), மற்றும் அருணகிரி (55) ஆகியோருடன் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நேற்று முன்தினம் காலை வந்தனர். ஊட்டியில் தாவரவியல் பூங்கா, படகு இல்லம் உள்பட பல்வேறு சுற்றுலா தளங்களுக்கு சென்ற இவர்கள் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு சொந்த ஊருக்கு கிளம்பினர். காரை செந்தில் ஓட்டினார்.
இரவு 9 மணி அளவில் ஊட்டி- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில், குன்னூர் மரப்பாலம் பகுதியில் சென்றபோது வளைவான பகுதியில் கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதைத் தொடர்ந்து சாலையோரம் இருந்த 100 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
2 பேர் பலி
விபத்தில் சிக்கியவர்கள் ஐயோ... அம்மா... என்று கதறினர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பின்னால் வந்த வாகன ஓட்டிகள் இதுகுறித்து குன்னூர் போலீசாருக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் குன்னூர் இன்ஸ்பெக்டர் சதீஷ், சப் -இன்ஸ்பெக்டர் தினகரன் தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து பள்ளத்தில் கவிழ்ந்த காரை மீட்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டனர். இரவு நேரமாக இருந்தால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர்களை இரவு 10.30 மணி அளவில் காரில் படுகுாயம் அடைந்த நிலையில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக 5 பேரும் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி சத்யா லட்சுமி மற்றும் அருணகிரி ஆகிய 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த செந்தில் உள்பட 3 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் உயிரிழந்த அருணகிரி திருமண தகவல் மையம் நடத்தி வந்து உள்ளார். சுற்றுலா வந்து இடத்தில் 2பேர் உயிரிழந்த சம்பவம் பெறும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு இடையே கோடை சீசன் தொடங்க இருப்பதால், சுற்றுலா பயணிகளுக்கு மலைப்பாதை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர்.