ஒருமுறை பயன்படும் பிளாஸ்டிக் பைகளை விற்றால் நடவடிக்கை

மாவட்டத்தில் தடையை மீறி ஒருமுறை பயன்படும் பிளாஸ்டிக் பைகளை விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் பூங்கொடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக அரசு ஒருமுறை மட்டும் பயன்படும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்து இருக்கிறது. இதில் பாலித்தீன் பைகளுக்கு விதிக்கப்பட்ட தடை தீவிரமாக அமல்படுத்தப்படுகிறது. இதற்கிடையே ரபியன் பைகள் எனும் பெயரில் பிளாஸ்டிக் கைப்பைகள் ஜவுளி கடைகள், அங்காடிகள், வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், பூ, உணவு, காய்கறிகள், மளிகை கடைகளில் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த வகை பைகளை ஒருமுறை பயன்படுத்தி விட்டு தூக்கி எறியப்படுவதால் குப்பையாக மாறிவிடுகிறது. அவை ஏரிகள், ஆறுகள், கடல் போன்ற நீர்நிலைகள், நிலத்தில் வாழும் உயிரினங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. எனவே தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படும் பிளாஸ்டிக் பைகளை தயாரித்தல், விற்பனை செய்தல் அரசு விதித்த தடையை மீறும் குற்றச்செயலாகும்.
மேலும் ஒருமுறை பயன்படும் பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை தடுக்க மக்களின் ஒத்துழைப்பு அவசியம். எனவே திண்டுக்கல் மாவட்டத்தில் அரசின் தடையை மீறி பிளாஸ்டிக் பைகளை தயாரிப்பவர்கள், விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.