கூடுதாழை, கூட்டப்பனையில் ரூ.52 கோடியில் தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை

கூடுதாழை, கூட்டப்பனையில் ரூ.52 கோடியில் தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நெல்லை கொக்கிரகுளம் மாவட்ட அறிவியல் மையம் அருகில் ரூ.5 கோடி மதிப்பில் வண்ண மீன் காட்சியகம் மற்றும் சில்லறை விற்பனையகம் அமைக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், ராஜகண்ணப்பன் ஆகியோர் கலந்து கொண்டு, அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தனர். பின்னர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பல்வேறு வகையான வண்ண மீன்களை ஒரே இடத்தில் காட்சிப்படுத்தி மீன்வளர்ப்பு மற்றும் பொழுது போக்கு அம்சமாகவும், தொழில் ரீதியான வளர்ச்சிக்கு ஊக்குவிக்கும் வகையில் ரூ.5 கோடி மதிப்பில் இந்த வண்ண மீன் காட்சியகம் மற்றும் சில்லறை விற்பனை கூடம் அமைக்கப்படுகிறது.
சுமார் 5 ஆயிரம் சதுர அடியில் 2 தளங்களுடன் கொண்ட 100-க்கும் மேற்பட்ட மீன் தொட்டிகளில் 1 லட்சம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு உள்ள மீன் காட்சியகத்தில் சுறா, திருக்கை உள்ளிட்ட 40-க்கும் அதிகமான கடல் மீன்களும், ஆஸ்கர், டிஸ்கஸ் போன்ற 100-க்கும் மேற்பட்ட நன்னீர் வண்ண மீன்களும் காட்சிப்படுத்தப்படும்.
இதனை பொதுமக்கள் மற்றும் மாணவ- மாணவிகள் விழிப்புணர்வுக்காகவும், அலங்கார மீன்கள் சார்ந்த கல்வி அறிவு பெறவும், பொழுது போக்கிற்காகவும் செயல்படுத்த இருக்கிறோம். இது வெளிநாட்டு தொழில்நுட்பங்களை கொண்டு நவீன சுத்திகரிப்பு உபகரணங்களை பயன்படுத்தி இயக்கப்படும் முதல் அரசு வண்ண மீன் காட்சியகம் ஆகும். மேலும் தனியாக இயங்கக்கூடிய அவசர மற்றும் மீன் உயிரி காக்கும் கூடமும் இதில் அடங்கும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தனியார் மீன்வள கல்லூரியும், தென்காசி மாவட்டத்தில் அரசு கால்நடை கல்லூரியும் கேட்டு கோரிக்கை வருகிறது. இதுதொடர்பாக முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலிக்கப்படும்.
ரூ.52 கோடியில் கூடுதாழை, கூட்டப்பனையில் தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வண்ண மீன் உற்பத்தி மற்றும் விற்பனையில் இந்தியாவில் கொல்கத்தா முதலிடத்தில் உள்ளது.
தமிழ்நாட்டில் முதல்-அமைச்சர் தொகுதியான கொளத்தூரில் ரூ.50 கோடியில் வண்ண மீன் உற்பத்தி மற்றும் விற்பனை மையம் உள்ளது. இந்த மையம் விற்பனை மற்றும் உற்பத்தியில் இந்தியாவில் 2-வது இடத்தில் உள்ளது. அதை முதலிடத்திற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மீனவர்கள் கடலில் அடிக்கடி மோதி கொள்ளும் சம்பவங்களை தடுக்க ரோந்து படகு கேட்டு கோரிக்கை வந்துள்ளது. விரைவில் கடலோர காவல் படையினருக்கு ரோந்து படகு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் கார்த்திகேயன், ஞானதிரவியம் எம்.பி., அப்துல்வகாப் எம்.எல்.ஏ., நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.