கி.பி. 12-ம் நூற்றாண்டு தீர்த்தங்கரர் சிற்பம் கண்டெடுப்பு

தா.பேட்டை அருகே கி.பி. 12-ம் நூற்றாண்டு தீர்த்தங்கரர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.
தா.பேட்டை, ஜூன்.14-
இந்து சமய அறநிலையத்துறை திருச்சி மண்டல தொல்லியல் ஆலோசகரும், தொல்லியல் துறை முன்னாள் உதவி இயக்குனர் கணேசன் தா.பேட்டை பகுதியில் ஆய்வு பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது, தா.பேட்டையில் இருந்து வடமலைப்பட்டி கிராமத்திற்கு செல்லும் சாலையில் செல்லாண்டி அம்மன் கோவிலுக்கு அருகே தீர்த்தங்கரர் சிற்பம் கண்ெடடுக்கப்பட்டது.
இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் கணேசன் கூறும்போது, கி.பி.3-ம் நூற்றாண்டு முதல் தமிழ்நாடு முழுமையும் சமணசமயம் பரவியிருந்தது. பசி என்று வருவோருக்கு உணவளித்தல், அச்சம் கொண்டு வருவோருக்கு அடைக்கலம் அளித்தல், நோய்களுக்கு மருத்துவம் செய்தல், அறியாமையில் உள்ளவர்களுக்கு அறிவு கல்வி வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொண்ட சமண சமய சான்றோர்களே தீர்த்தங்கரர்கள். அத்தகைய தீர்த்தங்கரர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் தோன்றி சமண சமயக் கோட்பாடுகளை நாடு முழுவதும் பரப்பியுள்ளனர். அவ்வாறு தோன்றிய 24 தீர்த்தங்கரர்களின் ஒருவர் தான் இங்கு கண்டெடுக்கப்பட்ட தீர்த்தங்கரர் சிற்பம் ஆகும். தமிழ்நாட்டில் கரூர், புகழிமலை, கழுகுமலை, பூலாங்குறிச்சி, சித்தன்னவாசல், குளித்தலை, ஜவர்மலை, உண்டான் கல்பாறை போன்ற பல இடங்களில் சமண சமயத்தின் வரலாற்று தடயங்கள் பரவி இருக்கின்றன. அவை அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும். அப்போது, தான் தமிழ்நாடு வரலாற்றில் தொடர்ச்சியான பரிணாம வளர்ச்சியை அறிந்து கொள்ள முடியும். இங்குள்ள தீர்த்தங்கரர் சிற்பத்தை பார்க்கும்போது கி.பி. 12-ம் நூற்றாண்டை சேர்ந்தது என்பதை உறுதிப்படுத்தலாம் என்றார்.