அரசு மருத்துவமனையில்ரூ.23 கோடியில் கூடுதல் கட்டிடம்

திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் ரூ.23 கோடியில் கூடுதல் கட்டிடம் கட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டினார்.
திருச்செங்கோடு
அடிக்கல் நாட்டு விழா
திருச்செங்கோடு அரசு மருத்துவமனையை ரூ.23 கோடி மதிப்பீட்டில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இணையாக மேம்படுத்த கூடுதல் மருத்துவமனை கட்டிடமானது தரைத்தளத்துடன் கூடிய 5 தளங்கள் கொண்ட கட்டிடமாக கட்டப்பட உள்ளது. இந்த பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா தலைமை தாங்கினார். வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன், நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதுரா செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். தொடர்ந்து ரூ.80. லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாணிக்கம்பாளையம் அரசு துணை செவிலியர் பயிற்சிப்பள்ளி மாணவியர் விடுதி கூடுதல் கட்டிடத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
பின்னர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் ரூ.23. கோடி மதிப்பீட்டில் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையினை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இணையாக மேம்படுத்த கூடுதல் மருத்துவமனை கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மேலும் ராசிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.53 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கூடுதல் கட்டிட பணிகளும், பரமத்திவேலூரில் ரூ.23.75 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள அதிநவீன தீவிர சிகிச்சை பிரிவு கட்டிட பணிகளும் விரைவில் தொடங்கப்பட உள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் ரூ.100 கோடி மதிப்பீட்டில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த பணிகள் நிறைவு பெற்றதும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாமக்கல் மாவட்டத்திற்கு நேரில் வருகை புரிந்து திறந்து வைக்க உள்ளார். தமிழ்நாட்டில் 500 நகர்புற நலவாழ்வு மையத்தினை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார். அதில் நாமக்கல் மாவட்டத்திற்கு 7 நகர்புற நலவாழ்வு மையத்தினை திறந்து வைத்துள்ளார்.
இவ்வாறு அவர் பேசினர்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் இயக்குனர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இளங்கோ, மகேஸ்வரன், இணை இயக்குனர்கள் விஜயலட்சுமி, ராஜ்மோகன், நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, துணை இயக்குனர்கள் பூங்கொடி, வாசுதேவன், நகர்மன்ற தலைவர்கள் திருச்செங்கோடு நளினி சுரேஷ் பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திருச்செங்கோடு அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் மோகன பானு நன்றி கூறினார்.